இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி மொத்தமாக விடைபெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகிறார்கள்.
அதனுடைய முதல்படியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அத்துடன் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவது உறுதியல்ல என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தது ஏராளமான ரசிகர்களை கோபமடைய வைத்தது.
உள்ளூர் காரணத்தை உடைத்த விராட், ரோஹித்:
மறுபுறம் 2027 உலகக்கோப்பை வாய்ப்பைப் பிடிக்க விராட், ரோஹித் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வதுடன் உள்ளூரில் விளையாடி ஃபார்மை மெய்ண்டன் செய்ய வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினர். அந்த சூழ்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தொடரநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி பதிலடி கொடுத்தார்.
அதே போல கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி பதிலடி கொடுத்துள்ளார். அதோடு நிற்காத அவர்கள் 2025 விஜய் ஹசாரே உள்ளூர் கோப்பையில் களமிறங்கி சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தியுள்ளனர். இந்நிலையில் இனிமேல் உள்ளூரில் விளையாடவில்லை என்பதை காரணமாக வைத்து விராட், ரோஹித்தை கழற்றி விட முடியாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா பாராட்டு:
ஏனெனில் எப்போது உள்ளூரில் விளையாடினாலும் தங்களால் அசத்த முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளதாக ஆகாஷ் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித், கோலி ரன்கள் அடித்துள்ளார்கள். ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்த அவர்களில் ஒருவர் ஜெய்பூரில் சிக்கிம் அணியை அடித்து நொறுக்கி அசத்தினார். மற்றொருவர் ஆந்திராவுக்கு எதிராக பெங்களூருவில் மிரட்டினார்”
இதையும் படிங்க: இந்தியாவை திட்டுனவங்க இன்று ஆஸியையும் பேசுங்க.. இப்படியே போனா அதை காப்பாற்ற முடியாது.. மான்டி பனேசர்
“அவர்களுடைய பங்களிப்பால் திடீரென உள்ளூர் போட்டிகள் நமது விவாதங்களில் அங்கமாக வந்துள்ளது. விராட், ரோஹித் எங்கே சென்றாலும் ரன்கள் அடிப்பார்கள். அவர்கள் உள்ளூரில் விளையாடாவிட்டால் தடுமாறுவார்கள் அல்லது உள்ளூரில் ரன்கள் அடிக்காவிட்டால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அவர்கள் உள்ளூரில் விளையாடும் போது உயர்த்தப்படுகிறார்கள். அவர்களுடைய வருகை உள்ளூர் போட்டிகளை முதன்மை செய்திகள் கொண்டு வந்துள்ளது” என்று கூறினார்.



