இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு மூன்று விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராத அவர் கடந்த ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக வந்ததும் அவரை இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.
வருண் கம்பேக்:
அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பவுலிங் செய்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அந்த வகையில் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் அவர் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கினாலும் அதற்காக பயப்படாமல் வருண் பந்தை காற்றில் மெதுவாக சுழற்றுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதுவே இரண்டாவது வாய்ப்பில் வருண் சக்கரவர்த்தி அசத்துவதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தி மீண்டும் வந்தது முதல் பவர் பிளேவில் பந்து வீசி வருகிறார். இந்த போட்டியில் 6வது ஓவரில் அவர் அற்புதமாக பவுலிங் செய்தார். அவர் பந்தை காற்றில் மெதுவாக வீசுகிறார் என்பதை நான் மிகவும் விரும்புகிறேன்”
ரசித் கான் போல:
“அவர் பந்தை பறக்க விடுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. என்னுடைய கருத்துப்படி வேகம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் இப்போதெல்லாம் ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களிடம் கொஞ்சம் அடி வாங்கினால் உடனடியாக பந்தை வேகமாக வீசுகிறார்கள். இருப்பினும் அவர்களிடம் தன்னம்பிக்கை இருந்தால் மெதுவாக வீசுவார்கள்”
இதையும் படிங்க: ஷமி ஏன் விளையாடல? உங்க திட்டம் சரியான எதுவா இருந்தாலும் இதை சொல்லிடுங்க.. ஆகாஷ் சோப்ரா கவலை
“ரசித் கானாக இருந்தால் மட்டுமே அப்படி சிக்ஸர்கள் அடித்தாலும் மீண்டும் நீங்கள் பயப்படாமல் மெதுவாக பவுலிங் செய்ய செல்வீர்கள். ஆனால் ரசித் கான் பவுலிங் ஸ்டைல் வித்தியாசமானது. அவர் கொஞ்சம் வேகமாக வீசுவார். இருப்பினும் வருண் சக்கரவர்த்தி ரசித் கிடையாது” என்று கூறினார். இதை அடுத்து இந்த தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



