ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக உலகக் கோப்பைகளை வென்ற அணியாக உலக சாதனை படைத்துள்ளது. மேலும் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற அணியாகவும் ஆஸ்திரேலியா திகழ்கிறது. அதனால் ஆஸ்திரேலியாவை சர்வதேச கிரிக்கெட்டின் அசுரன் என்று அழைத்தால் மிகையாகாது.
அந்தளவுக்கு தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் போராடி வெல்லக்கூடிய குணத்தைக் கொண்ட ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போனவர்களாக அறியப்படுகிறார்கள். எதிரணி வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ஆஸ்திரேலியர்கள் வேண்டுமென்றே ஏதேனும் வார்த்தைகளை சொல்லி கவனத்தை சிதற வைத்து வெற்றி காண்பார்கள். அதனால் ஆஸ்திரேலியாவில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டுமென எம்எஸ் தோனி ஒரு முறை தெரிவித்திருந்தார்.
ஹைடன் செய்த ஸ்லெட்ஜிங்:
இந்நிலையில் ஒருமுறை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இல்லாத தம்மை தேவையின்றி ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஹைடன் ஸ்லெட்ஜ் செய்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அதுவே கடைசியாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி வென்ற டெஸ்ட் தொடராகும்.
அந்தத் தொடரில் முதல் போட்டியில் 0, 5 ரன்கள் மட்டுமே அடித்த ஆகாஷ் சோப்ரா சென்னையில் நடைபெற்ற 2வது போட்டியில் கழற்றி விடப்பட்டார். நாக்பூரில் நடைபெற்ற 3வது போட்டியில் மீண்டும் வாய்ப்பை பெற்ற அவர் சிறப்பாக விளையாடவில்லை. அந்தத் தொடரின் போது ஹைடன் தம்மை ஸ்லெட்ஜ் செய்தது குறித்து தற்போது ஆகாஷ் சோப்ரா மனம் திறந்தது பின்வருமாறு.
ஆஸி என்றாலே ஸ்லெட்ஜிங் தானே:
“ஒரு நாள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இல்லாத போது கூட என்னை மேத்தியூ ஹைடன் ஸ்லெட்ஜ் செய்தார். அதற்கு என்னை ஏன் ஸ்லெட்ஜிங் செய்கிறீர்கள்? நான் களத்திற்கு ஃபீல்டிங் செய்வதற்காக மட்டுமே வந்தேன் என்று அவரிடம் கேட்டேன். அப்போது அவர் இந்த பிட்ச் சுழலுமா? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நீங்கள் தான் பேட்டிங் செய்கிறீர்கள், எனவே பிட்ச்சை படிப்பது உங்களுடைய வேலை, நான் ஃபீல்டிங் செய்த பின் பெவிலியன் திரும்பி விடுவேன் என்று அவரிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ் விளையாட முடியாமல் போனால் ஆசிய கோப்பைக்கான கேப்டன் யார்? – விவரம் இதோ
“அது முற்றிலும் சம்பந்தமற்ற பேச்சாக்கும். இருப்பினும் அதுவே ஆஸ்திரேலியர்களின் வழியாகும். அதுவே அவர்களுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வருகிறது. ஹைடன் அது போன்ற தருணங்களில் வளர்ந்தார். அந்த விஷயத்தில் ஆஸ்திரேலியர்கள் உயர்தரத்தை நிர்ணயித்துள்ளார்கள். எது நடந்தாலும் அது களத்தில் மட்டுமே இருக்கும். போட்டி முடிந்ததும் அவர்கள் மகிழ்ச்சியுடன் மதுவை பகிர்ந்து கொள்வார்கள்” என்று கூறினார்.



