வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறுவதற்கு பேட்டிங் துறையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக அறிமுகமாக களமிறங்கிய திலக் வர்மாவை தவிர்த்து சுப்மன் கில், சஞ்சு சாம்சன் போன்றவர்கள் எதிர்பார்த்ததை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் எதிராக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தனர். அப்படி சுமாராக செயல்பட்ட இளம் இந்திய வீரர்களில் தொடக்க வீரராக களமிறங்கிய இசான் கிசான் அடித்து நொறுக்குவதற்கு பதிலாக 6, 23 என 2 போட்டிகளிலும் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஐபிஎல் இல்ல கண்ணா:
ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் இரட்டை சதமடித்தது உட்பட 17 போட்டிகளில் 694 ரன்களை 46.26 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தம்முடைய அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அவர் அதன் பின் தடுமாற்றமாகவே செயல்பட்டு இதுவரை 29 போட்டிகளில் 686 ரன்களை 24.50 என்ற சுமாரான சராசரியிலும் 121.63 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டிலுமே எடுத்து வருகிறார்.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் 91 போட்டிகளில் 2324 ரன்களை எடுத்துள்ள அவர் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் இந்திய மண்ணிலும் சரி வெளிநாட்டு மண்ணிலும் சரி அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறுகிறார். அதன் காரணமாக 3வது போட்டியில் அவரை கழற்றிவிட்ட இந்தியா ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியும் கண்டது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து ஐபிஎல் தொடரில் அசத்தும் இஷான் கிசான் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதற்கு பதிலாக எதிர்கொள்ளும் பந்துகளில் 50க்கும் மேற்பட்ட சதவீதம் ரன்கள் எடுக்க முடியாமல் திணறுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடர் போல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் சுலபமாக அசத்தி விட முடியாது என்று இஷான் கிஷானுக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டின் துவக்க வீரராக இரட்டை சதமடித்துள்ள அவரால் டி20 கிரிக்கெட்டில் இன்னும் அதிரடியாக விளையாட முடியவில்லை. முதலில் சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் தொடருக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் குழப்பிக்கொள்ளாதீர்கள். ஏனெனில் ஐபிஎல் தொடரில் நீங்கள் தொடர்ச்சியாக ஒரே சீசனில் 14 போட்டிகளில் விளையாடுகிறீர்கள்”
“அங்கே இஷான் கிசான் போன்றவர் டாப் ஆர்டரில் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணியில் மிக முக்கிய வீரராக விளையாடுகிறார். அதனால் உங்களுடைய இடத்திற்கு எந்த போட்டியும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதால் ஒரே வழியில் தொடர்ந்து விளையாடும் உங்களுக்கு ஒன்றில் சொதப்பினால் மற்றொன்றில் அசத்த நிறைய போட்டிகள் கிடைக்கும் என்பது தெரியும். எனவே ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் நீங்கள் ஃபார்மை மீட்டெடுத்து விடுவீர்கள். ஆனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தான் ஒரு தொடர் வரும்”
இதையும் படிங்க:படு காஸ்ட்லீயான லம்போர்கினியில் தனது மனைவியுடன் வந்த ரோஹித் சர்மா – கார் நம்பர் பிளேட் தான் ஹைலைட்டே
“அதில் நீங்கள் நல்ல துவக்கத்தை பெறாமல் போனால் குறைவாக போட்டிகள் இருப்பதன் காரணமாகவும் உங்களுடைய இடம் பாதுகாப்பாக இல்லை என்பதன் காரணமாகவும் யோசிக்கத் துவங்கி தடுமாறுவீர்கள். ஏனெனில் உங்களது இடத்திற்காக மற்றொருவர் காத்திருப்பார். எனவே வெளியே ஒருவர் காத்திருப்பதும் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த வகையில் இந்த தொடரை பார்க்கும் போது களமிறங்கிய 2 போட்டிகளில் இஷான் கிசான் 50% மேல் டாட் பந்துகளை எதிர்கொண்டுள்ளார். ஆனால் பொதுவாக அவர் அப்படி விளையாட மாட்டார்” என்று கூறினார்.