வங்கதேசத்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் அக்டோபர் 12ம் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்திய அணி 297-6 ரன்கள் குவித்தது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த முழு உறுப்பு நாட்டு அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக சஞ்சு சாம்சங் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த வங்கதேசத்தை 164-7 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்றது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
தோனி, விராட், ரோஹித் வழி:
முன்னதாக அப்போட்டியில் இலக்கு 300 ரன்களுக்கு பதிலாக 170 என்று நினைத்துக் கொண்டு பந்து வீசி வங்கதேசத்தை கட்டுப்படுத்துமாறு இந்திய பவுலர்களிடம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சொன்னார். கடைசியில் அவர் சொன்னதைப் போலவே 164 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டி இந்திய பவுலர்கள் வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் தோனி, கோலி, ரோஹித் ஆகிய முன்னாள் கேப்டன்களை விட சூரியகுமார் வித்யாசமான சுயநலமற்ற அணுகுமுறையை அதிகம் பின்பற்றுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் – சூரியகுமார் ஆகிய புதிய ஜோடி நன்றாக வேலை செய்கிறது. இலங்கையில் செய்ததை இங்கேயும் அவர்கள் செய்துள்ளார்கள். உலக சாம்பியனாக இருப்பது ஒன்று. ஆனால் அதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் காண்பித்து எதிரணிகளை கலங்கடிப்பது மற்றொன்று”
சுயநலமற்ற அணுகுமுறை:
“சம்பிரதாய கடைசி போட்டியாக இருந்தாலும் எதிரணி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் முக்கியமில்லை. நாம் சேசிங்கில் 300 ரன்களை துரத்துவோம். பந்து வீசும் போது எதிரணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவோம் என்ற அணுகு முறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். எம்.எஸ். தோனியின் நேரம் செயல்முறையை பற்றியதாக இருந்தது. விராட் கோலியின் நேரம் வெற்றிக்காக விளையாடுவதாக இருந்தது”
இதையும் படிங்க: பாகிஸ்தானின் இந்த உரிமையை தடை செய்யலாமான்னு ஐசிசியே யோசிக்கிறாங்க.. சோயப் அக்தர் வேதனை
“பயமின்றி விளையாடுவதே ரோகித் சர்மாவின் தத்துவமாக இருந்தது. சூரியகுமார் தொடர்ச்சியாக சுயநலமின்றி விளையாடுவதைப் பற்றி பேசுகிறார்” என்று கூறினார். அந்த வகையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூரியகுமார் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இப்போதே அவர் நான் சுயநலமற்ற அதிரடி அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



