
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் தங்களுடைய போட்டிகளை விளையாடுவதற்காக இந்தியா வர மாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. எனவே தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதிக்குமாறு ஐசிசி அமைப்புக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் சில இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் சிலர் இயற்கை எய்தியதால் இந்தியாவிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எச்சரித்தனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தாவை பிசிசிஐ அறிவுறுத்தியது. அதை ஏற்றுக்கொண்ட கொல்கத்தா அணியும் ரஹ்மானை கழற்றி விட்டது வங்கதேசத்தை கொந்தளிக்க வைத்தது. அதற்கு பதிலடியாக இந்தியா வர மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் வாரியம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வங்கதேசம் வராததால் இந்தியாவுக்கு 2026 டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் மட்டுமின்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கூட பெருமளவு பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் அது உலக கிரிக்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட வராதீர்கள். அது பரவாயில்லை”
“பாகிஸ்தான் போல தற்போது வங்கதேசமும் இந்தியாவுக்கு விளையாட வர மாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 அணிகள் மட்டுமே விளையாடுகின்றன. எனவே நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர்களில் 7 அணிகளுடன் மட்டும் விளையாட வேண்டுமா? என்று நிறைய மக்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு அப்படி விளையாடினால் என்ன? என்று நான் பதிலளிக்கிறேன். ஏனெனில் வங்கதேசத்துடன் நாம் விளையாடினால் அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பயனளிக்குமா?”
இதையும் படிங்க: ரூட் மாதிரி.. விராட் கஷ்டப்படாம அதை விட்டு கொடுத்ததுக்கு மொத்தமா ரிட்டையராகிருக்கலாம்.. மஞ்ரேக்கர் பேட்டி
“கடைசியாக அவர்களுக்கு எதிராக நாம் விளையாடிய போட்டி ஒன்றரை நாளில் முடிந்தது. அவர்களது பவுலர்களை நமது பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள். எனவே திடீரென அவர்கள் தரத்தில் முன்னேறி விட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஏற்கனவே நாம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில்லை. கடந்த 3 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒருமுறை கூட பாகிஸ்தான் டாப் 3 இடங்களை பிடித்ததில்லை. எனவே இது உலக கிரிக்கெட்டில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துமா?” என்று கூறியுள்ளார்.