ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி தங்களுக்கு சொந்த மண்ணில் பெங்களூருவை சந்திக்கிறது. கடந்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கௌதம் கம்பீர் வழி காட்டுதலில் கொல்கத்தா 3வது கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இம்முறை ஸ்ரேயாஸ் 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட சென்றுள்ளார். கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். எனவே ஏலத்தில் 1.50 கோடிகளுக்கு வாங்கிய அஜிங்கிய ரகானேவை கொல்கத்தா தங்களது புதிய கேப்டனாக நியமித்துள்ளது. 36க்கு ஆல் அவுட்டான பின் ஆஸ்திரேலிய மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியாவுக்கு கேப்டனாக ரஹானே வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர்.
வெறும் 1.50 கோடி:
மேலும் 2023 – 24 ரஞ்சிக் கோப்பையை ரஹானே மும்பை கேப்டனாக வெல்ல உதவினார். அப்படியே 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் பெரிய ரன்கள் குவித்த அவர் மும்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். எனவே கொல்கத்தா அணி வழி நடத்துவதற்கு அவர் சரியான கேப்டன் என்றே சொல்லலாம். இந்நிலையில் இவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருந்தும் ரஹானே 1.50 கோடிக்கு விலை போனது ஆச்சரியம் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை இம்முறை ஃபைனலுக்கு அழைத்துச் செல்வதே ரகானேவுக்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரஹானே இதுவரை 25 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். எனவே அவர் புதியவர் கிடையாது. கடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பையை வெல்ல உதவிய அவர் மும்பை மற்றும் இந்தியா அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்”
சாம்பியன் அணியின் கேப்டன்:
“கேப்டனாக அவர் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளார். அப்படி நிறைய அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் இங்கே அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஐபிஎல் தொடரில் அவரைத் தவிர்த்து யாருமே ஒற்றை இலக்க கோடிகளில் வாங்கப்படவில்லை. ரஹானே 1.50 கோடிக்கு கடைசி நேரத்தில் வாங்கப்பட்டார். எனவே கேப்டன்ஷிப் என்பது அவரை வாங்கிய பின்பு முடிவெடுக்கப்பட்டது போல் தெரிகிறது”
இதையும் படிங்க: 200 ஸ்ட்ரைக் ரேட்டை விட.. 200% எனர்ஜியுடன் விராட் கோலி செய்ற இது முக்கியம்.. பியூஸ் சாவ்லா ஆதரவு
“கொல்கத்தா கோப்பையை வென்ற அணி என்பது அவருக்கு சவாலாக இருக்கும். ஏனெனில் நீங்கள் கோப்பையை தக்க வைக்க வேண்டிய அணியை எப்படி வழிநடத்தப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறை குறைந்தபட்சம் கொல்கத்தா ஃபைனல் செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். கோப்பையை முதல் முறையாக வெல்வதை விட அதை தக்க வைப்பது எளிதானதாக இருக்காது” என்று கூறினார்.



