
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்த அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதையும் சேர்த்து 61 போட்டிகளில் அவர் 97 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சஹால் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
இத்தனைக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஷ்தீப் சிங் மூன்று வருடத்திற்குள் இந்த சாதனையை படைத்துள்ளது வியப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட்கள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் தற்சமயத்தில் மிட்சேல் ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடி ஆகியோரை விட அர்ஷ்தீப் சிங் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் சிங்கை எது ஸ்பெஷலாக உருவாக்கியது என்பது பெரிய கேள்வியாகும்? ஏனெனில் அவர் மிகவும் வேகமாக இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் பந்தை இருபுறங்களிலும் ஸ்விங் செய்கிறார். அது டி20 கிரிக்கெட்டில் எளிதான விஷயம் கிடையாது. பந்தை மீண்டும் மீண்டும் வெளியே எடுத்துச் சென்று அவர் எதிரணிகளுக்கு வலையை விரிக்கிறார்”
“பென் டக்கெட்டுக்கு எதிராக அவர் புல்லர் பந்தை வீசினார். உங்களிடம் ஸ்விங் இல்லாமல் போனால் அந்தப் பந்தை வீசுவதற்கு தைரியம் இருக்காது. ஆனால் அர்ஷ்தீப்பிடம் ஸ்விங் இருக்கிறது. கிரிக்கெட் வல்லுனர்களும் அவரது பன்முகத் தன்மையை பாராட்டுகிறார்கள். அவர் ஸ்லோ பவுன்சர் பந்துகளையும் நன்றாக புத்திசாலித்தனமாக வீசுகிறார்”
இதையும் படிங்க: 38/7 டூ 163.. மானத்தில் தப்பிய வெ.இஸை சுருட்டிய பாகிஸ்தான்.. நோமன் அலி வரலாறு காணாத ஹாட்ரிக் சாதனை
“ஷாஹீன் அப்ரிடி, மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் சிறப்பான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் அர்ஷ்தீப் சிங் உண்மையில் சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவுக்காக 100 சர்வதேச டி20 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலராகவும் அவர் சாதனை படைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.