தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்ஸ்சின் போது 124 ரன்கள் என்ற சிறிய இலக்கினை துரத்த முடியாமல் சுருண்டது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை வழங்கிய : ஆகாஷ் சோப்ரா
இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சின் போது 27 பந்துகளை சந்தித்து 12 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 4 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிலும் குறிப்பாக அவர் இரண்டு முறையும் மார்க்கோ யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு சிறிது தடுமாற்றம் மூன்று வகையான போட்டிகளிலும் இருந்து வரும் வேளையில் இந்த டெஸ்ட் தொடரிலும் அதுவே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டாவது போட்டியில் மார்க்கோ யான்சனை சமாளித்து எவ்வாறு அவர் சிறப்பாக விளையாட வேண்டும்? என்பது குறித்து சில அறிவுரைகளை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஜெய்ஸ்வாலுக்கு சிறிய அளவில் பிரச்சனை இருக்கிறது. அதனை மூன்று வகையான போட்டிகளிலுமே நான் பார்த்து வருகிறேன். இந்தியாவிலும் சரி, இந்தியாவை விட்டு வெளியில் எந்த நாடுகளில் இருந்தாலும் சரி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது அவர் சிரமத்தை சந்திக்கிறார். அப்படி அவர் இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் சிரமத்தை சந்தித்துள்ளார்.
ஆனால் இரண்டாவது போட்டியின் போது அப்படி அவர் அந்த பிரச்சனையில் இருந்து வெளியேற வேண்டுமெனில் மார்க்கோ யான்சென் பந்துவீசும் போது அவரை எதிர்த்து அதிரடியாக விளையாட நினைக்காமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ஓவர்களை தள்ள வேண்டும். மார்க்கோ யான்செனால் அதிக ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீச முடியாது. எனவே அவரது ஸ்பெல்லை கடந்துவிட்டால் நிச்சயம் ஜெய்ஸ்வால் மற்ற பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்து அடித்து பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்லலாம்.
இதையும் படிங்க : இன்னும் 5 விக்கெட் போதும்.. 2ஆவது டெஸ்ட் போட்டியில் மாபெரும் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா
இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பிரச்சனை இருக்கும் போது அவர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடாமல் ஈகோவை கைவிட்டு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து மற்ற பவுலர்களை அடித்து விளையாடினால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



