
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைத்தது. அந்த சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டும் பரிசுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரிச்சா கோஸ் இந்தியாவின் வெற்றிக்கு விக்கெட் கீப்பர் வீராங்கனையாக விளையாடி முக்கிய பங்காற்றினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லீக் சுற்றில் அவர் 94 ரன்கள் அடித்து போராடிய போதிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் முக்கியமான அரையிறுதியில் 26 (16) ரன்கள் அடித்த ரிச்சா கோஸ் இறுதிப்போட்டியில் 34 (24) ரன்களை அடித்தார். அந்த வகையில் மொத்தம் 235 ரன்களை குவித்த அவர் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அப்படி மேற்கு வங்கத்திலிருந்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிச்சாவிற்கு பெங்கால் வாரியத்தின் சார்பில் சில தினங்களுக்கு முன் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டியில் 34 ரன்கள் கௌரவிக்கும் வகையில் அவருக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 34 லட்சம் பரிசுத் தொகை கொடுத்தார். மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் சௌரவ் கங்குலி, ஜூலன் கோஸ்வாமி கையொப்பமிட்ட தங்க பேட் மற்றும் பந்து ரிச்சாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
அத்துடன் மேற்கு வங்கத்தில் கௌரவ டிஎஸ்பி பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அது போக அரசு சார்பில் ரிச்சாவுக்கு தங்கச் சங்கிலி மற்றும் பங்கா பூசன் விருதும் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் விட ரிச்சா கோஸ் பெயரில் அவருடைய சொந்த ஊரான டார்ஜிலிங்கில் புதிய மைதானம் கட்டப்படும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது பற்றி மம்தா அவர்கள் பேசியது பின்வருமாறு.
“வடக்கு பெங்காலில் உள்ள சில்லிகுரியில் இருக்கும் சந்த்மணி தேயிலை எஸ்டேட் பகுதியில் ரிச்சா கிரிக்கெட் ஸ்டேடியம் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்படும். வங்காளத்தின் பிரகாசமான விளையாட்டுத் திறமைகளில் ஒருவரான ரிச்சாவை கௌரவிப்பதற்கும் மேற்கு வங்காளத்தில் சேர்ந்த இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு வழியாகும். இந்த திட்டம் விரைவில் மாநில அரசால் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: இது பாகிஸ்தான் இல்ல.. இந்தக் காரணத்தால் தெ.ஆ தொடரில் இந்திய அணி ஜெய்க்கும்.. கங்குலி பேட்டி
இந்த வாயிலாக இந்தியாவில் உள்ள ஒரு மைதானத்தின் பெயரை பெறப்போகும் முதல் கிரிக்கெட்டர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிச்சா படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின், தோனி, மிதாலி ராஜ் போன்றவர்களுக்கு அதிகபட்சமாக மைதானத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே பெயர் கிடைத்துள்ளது. ரிச்சாவுக்கு மட்டுமே மொத்த மைதானத்தின் பெயர் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.