ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2023 கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு பயணித்து பங்கேற்க முடியாது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். அதற்கு எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
இறுதியில் பாகிஸ்தான் விளையாடும் லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகளை அந்நாட்டிலேயே நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் கடந்த மாதம் அனுமதி கொடுத்தது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று அடம் பிடிக்கும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் ஃபைனல் உட்பட எஞ்சிய போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என்றும் ஆசிய கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த நிலைமையில் இந்த தொடருக்கான முழுமையான அட்டவணையை ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார்.
பாகிஸ்தான் முதலிடம்:
அதன் படி ஆகஸ்ட் 30ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் சொந்த மண்ணில் நேபாளை எதிர்கொள்கிறது. மேலும் அனைவருடன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி கண்டியில் நடைபெற உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானை தவிர்த்து இந்தியா தம்முடைய லீக் சுற்றில் நேபாளை செப்டம்பர் 4ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் பி ப்ரிவிலும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். அதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஃபைனலில் கோப்பைக்காக மோதும் வகையில் இத்தொடரின் ஃபார்மட் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு விஷயம் என்னவெனில் லீக் சுற்றில் எத்தனை வெற்றி பெறுகிறார்கள் என்பதை தாண்டி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா 2வது இடத்தையும் பிடிக்கும் என்று ஆசிய கவுன்சில் இப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது லீக் சுற்றின் முடிவில் பங்கேற்கும் 2 போட்டிகளில் 2 வெற்றிகளையும் பெறும் அணி முதலிடமும் 1 வெற்றி பெறும் அணி 2வது இடமும் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு செல்வதே வழக்கமாகும்.
இருப்பினும் இம்முறை ஒருவேளை பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெறும் 1 மட்டுமே வெற்றி பெற்றாலும் முதலிடம் பிடிக்கும். அதே போல ஒருவேளை 2 போட்டிகளிலும் இந்தியா 2 வெற்றிகளை பெற்றாலும் புள்ளி பட்டியலில் 2வது இடம் தான் பிடிக்கும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் ஒருவேளை இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒரு அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அந்த இடத்தை நேபாள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்னவெனில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. அதனால் ஒருவேளை புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தால் லாகூரில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் அந்த சூப்பர் 4 போட்டியில் பங்கேற்கும் நிலைமை உருவாகி விடும். அதை தவிர்ப்பதற்காகவே லீக் சுற்றில் 2 போட்டிகளில் வெறும் 1 வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் முதலிடம் பிடித்து அந்த முதல் சூப்பர் 4 போட்டியில் சொந்த மண்ணில் விளையாடும் வகையில் அட்டவணை இப்போதே உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:500வது போட்டியில் சச்சின், பாண்டிங், காலிஸ் போன்ற யாருமே செய்யாத – இரட்டை உலக சாதனைகளை படைக்கும் கிங் கோலி
இதே போலவே குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேசம் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் என்று தெரிவித்துள்ள ஆசிய கவுன்சில் அதில் ஏதேனும் ஒரு அணி வெளியேறினால் அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பிடிக்கும் என்று கூறியுள்ளது.



