அடிக்கடி பாஸ்போர்ட், போனை மறந்து ரோஹித் சர்மா அலைவார் – வைரலாகும் விராட் கோலி பேசிய 5 வருட பழைய தகவல்

virat kohli rohit sharma
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஜனவரி 21ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் நியூசிலாந்தை வெறும் 108 ரன்களுக்கு சுருட்டி பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா என்ன அறிவிக்க வேண்டும் என்பதை மறந்து திணறியது அனைவரையும் சிரிக்க வைத்தது.

பொதுவாகவே டாஸ் எப்படியாவது நமது பக்கம் விழுந்து விடாதா என்று அதிர்ஷ்டத்திற்காக காத்திருக்கும் கேப்டன்கள் டாஸ் வென்றதும் உடனடியாக தங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள திட்டங்களுக்கு ஏற்ற முடிவை நொடிப்பொழுது தாமதிக்காமல் அறிவிப்பார்கள். ஆனால் டாஸ் வென்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை மொத்தமாக மறந்த ரோகித் சர்மா தலையில் கை வைத்து “ம், ஆ, அது வந்து” என்ற வகையில் ஸ்கூல் பையன் போல சுமார் 10 – 15 நொடிகள் கழித்து ஒரு வழியாக பந்து வீசுகிறோம் என அறிவித்தது நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் மற்றும் நடுவர் ஸ்ரீநாத் ஆகியோரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

மறதிக்கு பெயர் தான் ரோஹித்:
இருப்பினும் போட்டியை பற்றி பல்வேறு கோணங்களில் நிறைய விவாதங்கள் செய்திருந்ததால் என்ன முடிவெடுத்தோம் என்று அந்த சமயத்தில் மறந்து விட்டதாக கேப்டன் ரோகித் சர்மா பின்னர் தெரிவித்தார். இந்நிலையில் இது போல அன்றாட வாழ்வில் பாஸ்போர்ட் உட்பட நிறைய பொருட்களை மறந்து விட்டு தேடி அலைவது ரோகித் சர்மாவின் வழக்கமான வேலை என்று அவருடன் கடந்த 10 வருடங்களாக நெருங்கி விளையாடி வரும் விராட் கோலி 5 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். அதைத் தோண்டி எடுத்துள்ள ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாக்கி வரும் அந்த வீடியோவில் விராட் கோலி பேசியது பின்வருமாறு.

“ரோகித் சர்மா மறக்கும் விஷயங்களின் எண்ணிக்கை அளவுக்கு வேறு யாரிடமும் இவ்வளவு மறதியை நான் பார்த்ததில்லை. தனது ஐபேட், பர்ஸ், போன் போன்ற அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் தேவையான பொருட்கள் மற்றும் சின்ன சின்ன விஷயங்களை கூட அவர் மறந்து விடுவார். மேலும் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் தொலைந்தால் நான் வேறு ஒன்றும் புதிதாக வாங்கிக் கொள்வேன் என்று சொல்வார். சில சமயங்களில் அவர் எதையாவது விட்டு விட்டதை அவருக்கே தெரியாது. அதனால் பலமுறை ஹோட்டலில் இருந்து பேருந்து நோக்கி பாதி வழி சென்ற பின் “ஓ நான் எனது ஐபேடை விமானத்தில் விட்டு விட்டேன்” என்று நினைவு கூர்ந்து மீண்டும் எடுக்க செல்வார்”

- Advertisement -

“சில முறை அவர் பாஸ்போர்ட்டையும் தவற விட்டுள்ளார். அதை மீட்டெடுப்பது கடினமாக இருந்தது. அதனால் எங்களது அணியின் மேனேஜர் எப்போதும் ரோகித் சர்மா தன்னுடைய பொருள்களை எடுத்துக் கொண்டாரா? என்று கேட்பார். அவர் ஆம் என்று சொன்னவுடன் தான் பேருந்து புறப்படும். ரோகித் சர்மா உண்மையில் நீங்கள் சந்திக்கும் வேடிக்கையான நபர்களில் ஒருவர். அவர் அடிக்கடி மும்பை மொழியில் பேச தொடங்குவார். மேலும் ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்று நான் சொன்னால் அங்கு அதிகம் இல்லை என்று சொல்வார். ஆனால் 5 – 10 நொடிகள் காத்திருந்த பின் மீண்டும் சரியானதை புரிந்து கொள்வார். எனவே அவர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பெரிய ஸ்கோர் வரலைன்னு ஒத்துகிறேன் – தன்னுடைய ஃபார்ம் மற்றும் விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மாவின் பதில் என்ன

அவர் சொல்வதைப் பார்க்கும் போது மறதிக்கு இந்திய அணியில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது ரோகித் சர்மா என்பது தெரிய வருகிறது. குறிப்பாக அன்றாட வாழ்வில் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களை கூட மறப்பவராக இருக்கும் ரோகித் சர்மாவின் மறதி நேற்றைய போட்டிய உலக அளவில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement