இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா முன்கூட்டியே கோப்பையை வென்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜனவரி 15ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 390/5 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்களும் சுப்மன் கில் சதமடித்து 116 ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 166* ரன்களும் குவித்து அசத்தினார்கள்.
அதை தொடர்ந்து 391 ரன்களை தூரத்திய இலங்கை ஆரம்ப முதலே துல்லியமாக பந்து வீசிய இந்தியாவின் அனலான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. கேப்டன் சனாக்கா 11 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களும் முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தல 2 விக்கெட்களும் சாய்த்தனர்.
ஜனவரி 15 கிங் கோலி டே:
அதனால் 317 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றி பெற்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் இத்தொடரை வென்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து 2013 உலகக் கோப்பை தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு 166* ரன்களை விளாசி முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்ததுடன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் மற்றும் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் ஆகிய உலக சாதனைகளை படைத்தார்.
கடந்த 15 வருடங்களாகவே இதே போல 3 வகையான கிரிக்கெட்டிலும் ஏராளமான ரன்களையும் சதங்களையும் அடித்து நிறைய வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சரிவை சந்தித்து சதமடிக்க முடியாமல் தவித்தார். அதற்கு துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 1020 நாட்கள் கழித்து சதமடித்து முற்றுப்புள்ளி வைத்த அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடினார்.
அத்துடன் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் சதமடித்து 2022 வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்த அவர் இந்த வருடம் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலும் சதமடித்து 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கினார். தற்போது மீண்டும் சதமடித்துள்ள அவர் 2019க்குப்பின் எப்படி இருந்தாரோ அதே பழைய விராட் கோலியாக முழுமையான பார்முக்கு திரும்பி விட்டதாக ரசிகர்களே உணர்ந்து சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
அதை விட இப்போட்டி நடைபெற்ற ஜனவரி 15ஆம் தேதியன்று 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 122 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 27ஆவது சதத்தை விளாசிய அவர் 2018ஆம் ஆண்டு அதே ஜனவரி 15ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்க மண்ணில் 153 ரன்களை விளாசி தன்னுடைய 21வது டெஸ்ட் சதத்தை அடித்தார். மேலும் 2019ஆம் ஆண்டு அதே தேதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 104 ரன்கள் குவித்து தன்னுடைய 39ஆவது ஒருநாள் சதத்தை அடித்த அவர் தற்போது 46வது ஒருநாள் சதத்தை அடித்துள்ளார்.
இதையும் படிங்க: சச்சினை சமன் செய்தும் மிஞ்சியும் கிரிக்கெட்டின் கிங்’காக விராட் கோலி படைத்த 3 புதிய உலக சாதனைகள்
அது போக 2012 மற்றும் 2016இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெவ்வேறு போட்டிகளில் முறையே 75 மற்றும் 59 ரன்களை குவித்துள்ள அவர் தனது கேரியரில் ஜனவரி 15ஆம் தேதியன்று களமிறங்கிய 6 போட்டிகளிலும் 4 சதங்கள் 2 அரை சதங்களை அடித்து அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதைப் பார்க்கும் அவரது ரசிகர்கள் பேசாமல் ஜனவரி 15ஆம் தேதியை விராட் கோலியின் தினம் என்று அறிவியுங்கள் என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.



