உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 ஜூன் மாதம் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சட்டோகிராம் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. முன்னதாக இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்ததால் துணை கேப்டனான கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்தி தனது கேரியரில் முதல்முறையாக கேப்டனாக ஒரு வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றார்.

ஆனால் ஏற்கனவே பேட்டிங்கில் தடவலாக செயல்பட்டு சுமாரான பார்மில் திண்டாடும் அவர் இத்தொடரில் பெரிய ரன்களை குவிக்க தவறிய நிலையில் கேப்டனாகவும் முதல் போட்டியில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசத்துக்கு பாலோ ஆன் கொடுக்காமல் சுயநலமான முடிவை எடுத்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. மொத்தத்தில் இந்த தொடரில் அனைத்து துறைகளிலும் சுமாராக செயல்பட்ட அவரது பெயரில் இதர வீரர்கள் தான் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பதிவு செய்ததாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அப்படி இத்தொடரில் அவர் செய்த நிறைய சொதப்பல்களுக்கு மத்தியில் 2வது போட்டியில் 145 ரன்களை துரத்தும் போது ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
கெடுப்பதே நீங்க தான்:
அப்போது வழக்கம் போல விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு பயந்து கொண்டு நைட் வாட்ச்மேனையும் அனுப்பாத அணி நிர்வாகம் அக்சர் படேலை அனுப்பியது. அந்த முடிவு பெரிய வெற்றியை தராத நிலையில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலியை அக்சர் பட்டேலுக்கு கீழே களமிறக்கிய ராகுல் டிராவிட் – கேஎல் ராகுல் ஆகியோரது அணுகுமுறை மிகவும் மோசமானது என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக வீரராக ராகுல் சுமாராக செயல்படும் நிலையில் பயிற்சியாளராக மாற்றங்கள் என்ற பெயரில் ராகுல் டிராவிட் தொடர்ந்து சொதப்பலான முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்சமயத்தில் இந்திய அணியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் இவர்களை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தது பின்வருமாறு. “விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவராக கேட்காத வரை அவரை கீழே அனுப்பியது எதிரணிக்கு இந்தியா அனுப்பிய நல்ல செய்தி கிடையாது. உடைமாற்றும் அறையில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த முடிவின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டார்”
“ஆனாலும் அந்த சமயத்தில் ரிஷப் பண்ட் களமிறங்கி அடுத்த நாள் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். அதே போல் விராட் கோலி அவுட்டான பின் ஜெயதேவ் உனட்கட்க்கு பதிலாக ரிசப் பண்ட் களத்திற்கு வந்திருக்க வேண்டும். முதலில் இது போன்ற இடது வலது கை பேட்ஸ்மேன்கள் சோதனைகளை நிறுத்துங்கள்” என்று கூறினார். அதாவது விக்கெட்டுகள் விழும் போது முதன்மை பேட்ஸ்மேன்களை ஒழித்து வைப்பது வங்கதேசத்துக்கு இந்தியா பயந்து விட்டது என்ற செய்தியை கொடுத்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

அதே நிகழ்ச்சியில் இது பற்றி பேசிய மற்றொரு முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விமர்சித்தது பின்வருமாறு. “விராட் கோலி உலகின் மிகச் சிறந்த வீரர். 15 ஓவர்கள் எஞ்சியிருந்த போது இடது கை பேட்ஸ்மேன் உங்களுக்கு தேவைப்பட்டால் ரிஷப் பண்ட் தானே வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் எங்கே சென்றார்? தூக்க மாத்திரை போட்டு கொண்டு தூங்கி விட்டாரா” என்று கூறினார்.
இதையும் படிங்க: உண்மையிலேயே இந்த ஒரு விஷயத்துக்காக பங்களாதேஷ் வீரர்களை பாராட்டியே ஆகனும் – ஆட்டநாயகன் அஷ்வின்
அப்படி நிறைய தருணங்களில் சொதப்பலாக செயல்படும் ராகுல் டிராவிட் – ராகுல் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறினால் மட்டுமே மீண்டும் இந்தியாவால் வெற்றி நடை போட முடியும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



