IND vs BAN: வீடியோ : சிக்சருடன் சதமடித்த காபா நாயகன் சுப்மன் கில் – 3வது நாளின் முடிவில் இந்தியாவின் வெற்றி நிலவரம் இதோ

Shubman Gill Century
- Advertisement -

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 2 – 0 என்ற கணக்கில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதியன்று சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்தது. கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரிஷப் பண்ட் 46, அஷ்வின் 58, குல்தீப் யாதவ் 40 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ரன்களை குவித்தனர்.

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் களமிறங்கிய அந்த அணி இந்திய பவுலர்களின் அனலான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல் பந்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷ்பிகர் ரஹீம் 28 ரன்களை எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

காபா நாயகன்:
அதை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா 258/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ராகுல் 23 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த புஜாராவுடன் கைகோர்த்து அட்டகாசமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதமடித்து 110 (152) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருக்குப்பின் அதிரடியாக செயல்பட்ட புஜாரா முதல் இன்னிங்ஸில் விட்ட சதத்தை 13 பவுண்டரியுடன் 102* (130) ரன்கள் குவித்து விளாசினார். அதைத்தொடர்ந்து 513 ரன்கள் துரத்தும் வங்கதேசம் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42/0 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் சாண்டோ 25*, ஜாகிர் ஹசன் 17* ரன்களில் இருக்கும் நிலையில் அந்த அணிக்கு 471 ரன்கள் தேவைப்படுவதால் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முன்னதாக இப்போட்டியில் 1443 நாட்கள் கழித்து சதமடித்த புஜராவுடன் இணைந்து அற்புதமாக பேட்டிங் செய்த சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2019 ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரர் விருதையும் வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் பெரிய அளவில் ஜொலிக்காமலேயே காயத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

இருப்பினும் கடந்த 2021ஆம் ஆண்டு யாராலும் மறக்க முடியாத இந்தியா பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ரிஷப் பண்ட் அதிரடியால் அவரது இன்னிங்ஸ் பெரிய அளவில் பேசப்படாத நிலையில் மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு பெற்ற அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் ஒருநாள் தொடர்களில் முதல் முறையாக சதமடித்து அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று தலா 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா அடுத்தடுத்த ஒயிட் வாஷ் வெற்றிகளை சுவைக்க முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: IND vs BAN : இவரா இது, 1443 நாட்கள் கழித்து அதிவேக சதமடித்த புஜாரா – டிக்ளேர் செய்த இந்தியா நிர்ணயித்த பெரிய இலக்கு இதோ

அதன் காரணமாக தற்போது டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் வாய்ப்பு பெற்ற அவர் ரோகித் சர்மா காயமடைந்ததால் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றி தன்னுடைய முதல் சதமடித்து சாதித்துள்ளார். அப்படி இந்த வயதிலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்தி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement