இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையின் மாபெரும் ஃபைனலில் டிசம்பர் 2ஆம் தேதியன்று சௌராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் மகாராஷ்டிரா அணி ஃபைனல் முன்னேறுவதற்கு அதன் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் முக்கிய காரணமாக திகழ்கிறார். ஏனெனில் 136, 154, 124, 21, 168, 124, 40, 220*, 168 என கடைசி 9 விஜய் ஹசாரே இன்னிங்ஸ்சில் பெரிய ரன்களை குவித்த அவர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய நாக் அவுட் போட்டிகளில் 220*, 168* என அடுத்தடுத்து பெரிய ரன்களை குவித்து கேப்டனுக்கு உதாரணமாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக உத்திர பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை அடித்து உலக சாதனையும் அவர் படைத்தார். அப்படி அசத்தலாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமாகி ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டார். இருப்பினும் கடைசி 3 போட்டியில் ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவர் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்திலிருந்து சென்னையை காப்பாற்றினார். அதற்கடுத்த சீசனில் தோனி கேட்டதைப் போல பேட்டிங்கில் ஸ்பார்க்கை தெறிக்க விட்டு 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பி வென்ற அவர் சென்னைக்கு 4வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி அந்த அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
அடுத்த கேப்டன்:
அதனால் இந்த வருடம் தக்க வைக்கப்பட்ட அவர் சுமாராக செயல்பட்டாலும் தற்போதுள்ள பார்மில் நிச்சயம் அடுத்த சீசனில் மிரட்டுவார் என்று சென்னை ரசிகர்கள் நம்புகிறார்கள். அதை விட விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கேப்டனாக மகாராஷ்டிரா அணியை வெற்றிகரமாக வழி நடத்துவதால் இளம் வீரராக இருக்கும் அவரை தோனிக்கு பின் சென்னையின் அடுத்த கேப்டனாக நியமிக்குமாறு அந்த அணி ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில் 4 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி 39 வயதை கடந்து விட்டதால் அடுத்த வருடம் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனாலேயே அடுத்த கேப்டனை உருவாக்க நினைக்கும் அவர் இந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவிடம் தமது பதவியை கொடுத்து அவரையும் கெடுத்து சென்னையின் வெற்றியையும் கெடுத்தார். எனவே தோனியை போல கூலாகவும் நல்ல பேட்டிங் திறமையும் கொண்டிருக்கும் ஒரு ருதுராஜ் இளம் வீரராக இருப்பதால் அடுத்த 5 – 10 வருடங்களுக்கு நல்ல கேப்டனாக செயல்பட முடியும் என்று சென்னை ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் தோனிக்கு அடுத்தபடியாக சென்னையின் கேப்டனாக வருவதற்கு உண்டான நிறைய தகுதிகள் ருதுராஜ் அவருக்கு உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் வீரர் மற்றும் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பெரும்பாலான சூழ்நிலைகளில் அமைதியாக இருந்து போட்டியை கவனித்து செயல்படும் விதம் அவரிடம் இருப்பதாக தெரிவிக்கும் ஹசி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் என்னவென்று எனக்கு தெரியாது ஆனால் தோனியை போல ருதுராஜ் மிகவும் அமைதியானவராக உள்ளார். தோனியை போலவே அழுத்தமான சூழ்நிலைகளை அமைதியாக கையாளும் குணம் அவரிடமும் உள்ளது. அத்துடன் போட்டியை நன்கு படிப்பவராக இருக்கும் அவர் அதற்கேற்றார் போல புரிந்து செயல்படுபவராக உள்ளார்”

“மேலும் அவருடைய இயல்பு, குணாதிசயம் மற்றும் ஆளுமை திறன் ஆகியவை காரணமாக அனைவரும் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டு அவரைச் சுற்றியிருக்க விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சில சிறப்பான தலைமை பண்புகளை அவர் பெற்றுள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்பத்தில் தோனியும் பெரிய அனுபவம் இல்லாத நிலையிலிருந்தே இந்தியா மற்றும் சென்னை அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். அவரது வழியில் இளம் வீரரான இவருக்கும் வாய்ப்பு கொடுப்பது நல்ல முடிவாகவே இருக்கும்.



