நியூசிலாந்துக்கு பயணித்துள்ள இளம் இந்திய அணி முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் விளையாடி வருகிறது. நவம்பர் 25ஆம் தேதியன்று துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 306 ரன்கள் குவித்த இந்தியா பந்து வீச்சில் கடைசி 30 ஓவர்களில் லாதம் – வில்லியம்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா இத்தொடரை வெல்வதற்கு நவம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா சூழ்நிலையில் களமிறங்குகிறது.
முதல் போட்டியில் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும் எக்ஸ்ட்ராவாக 30 – 40 எடுக்க தவறியது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அத்துடன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த பந்து வீச்சாளர்கள் இப்போட்டியில் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். குறிப்பாக ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மறுபுறம் முதல் போட்டியில் அட்டகாசமான வெற்றி பெற்ற நியூசிலாந்து அதே புத்துணர்ச்சியுடன் இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி டி20 தொடரில் சந்தித்து தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது.
செடன் பார்க்:
அப்படி வெற்றியாளரை தீர்மானிக்கும் இப்போட்டி நவம்பர் 27ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஹமில்டன் நகரில் இருக்கும் செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1950இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானத்தில் 1981 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது.
1. பச்சை புல் தரையில் 10000+ ரசிகர்கள் ஜாலியாக படுத்துக் கொண்டு பார்க்கும் அளவுக்கு இயற்கை ரம்யத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 32 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து 23 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
2. மறுபுறம் இந்த மைதானத்தில் வரலாற்றில் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 தோல்விகளையும் 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. குறிப்பாக இங்கு 7 போட்டிகளில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா கடந்த 2009இல் முதலும் கடைசியுமாக ஒரே வெற்றியை பதிவு செய்துள்ளது. 6 போட்டிகளில் தோற்றுள்ளது. அதனால் இம்முறை மிகுந்த கவனத்துடன் விளையாடுவது அவசியமாகிறது.
3. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. விராட் கோலி : 175
2. ரோஹித் சர்மா : 170
3. எம்எஸ் தோனி : 135
4. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர்களாக வீரேந்திர சேவாக் (125*), ஷ்ரேயஸ் ஐயர் (103) ஷிகர் தவான் (100) ஆகியோர் உள்ளனர். இந்த மைதானத்தில் இதுவரை எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்ற நிலைமையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 2 இந்திய பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி (8) மற்றும் அனில் கும்ப்ளே (5) உள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 347/4, 2009.
பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் செடன் பார்க் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. மேலும் இம்மைதானம் சிறியது என்றாலும் முதல் போட்டி நடைபெற்ற ஆக்லாந்து மைதானம் போல் அல்லாமல் நாலாபுறமும் சரிசமமான பவுண்டரி அளவுகளைக் கொண்டது. இங்கு வெளிப்புற மைதானங்கள் வேகமாக இருக்கும் என்பதால் பிட்ச்சில் கிடைக்கும் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி அதிரடி காட்டும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கலாம்.
இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ஆகும். அதனால் 280 – 300+ ரன்கள் கொண்ட போட்டியாக இப்போட்டி அமையலாம். அதே சமயம் இது திறந்தவெளி மைதானம் என்பதால் 10 – 20+ கி.மீ வேகத்தில் வீசக்கூடிய காற்று ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக கைகொடுக்கும். அத்துடன் மிடில் ஓவர்களில் திறமையான ஸ்பின்னர்கள் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இதையும் படிங்க : நீங்க இங்க வந்தா தான் நாங்க அங்க வருவோம். இல்லனா உங்களுக்கு தான் லாஸ் – இந்தியாவை எச்சரித்த ரமீஸ் ராஜா
இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதாலும் வரலாற்றில் இங்கு சேசிங் செய்த அணிகள் நிறைய போட்டிகளை வென்றுள்ளதாலும் டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



