ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற கேள்வியே எழுந்தது. அப்போது கைகோர்த்த விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின்னர் இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி என்பது நம்ப முடியாத வகையில் அமைந்தது. இந்நிலையில் போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்தும் விராட் கோலி ஆட்டம் குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை புகழ்ந்து கூறியுள்ளார்.

குறித்து அவர் கூறுகையில் : இந்த வெற்றி குறித்து பேசுவதற்கு வார்த்தையே இல்லை. அவ்வளவு சிறப்பான வெற்றியாக இது எங்களுக்கு அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். ஆனாலும் விராட் கோலி மற்றும் பாண்டியா ஆகியோர் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர்.
இறுதிவரை களத்தில் இருந்து கடைசி பந்து வரை விராட் கோலி விளையாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை இன்றும் உறுதி செய்து விட்டார். இந்தியாவுக்காக விராட் கோலி ஆடிய மிகச் சிறப்பான ஆட்டம் இதுதான் என்று நான் கூறுவேன்.
இதையும் படிங்க : IND vs PAK : சாத்தியமே இல்லாத போட்டியை முடித்து கொடுத்த விராட் கோலி. அனல் பறந்த போட்டி – ஜெயிச்சது எப்படி?
அந்த அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை இந்த போட்டியில் விராட் கோலி வெளிப்படுத்தி உள்ளார் என ரோகித் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதோடு போட்டியின் முடிவில் விராட் கோலியை கட்டி அணைத்த ரோஹித் அவரை தூக்கி சுற்றியதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.



