அவரை கழற்றிவிட்டு இவர வாங்கிடுங்க சிஎஸ்கே, 2 வரலாற்று சாதனை படைத்த இங்கி வீரரை பாராட்டும் சென்னை ரசிகர்கள்

Sam Curran ENGLAND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்று முடிந்து தற்போது முக்கியமான சூப்பர் 12 சுற்று துவங்கியுள்ளது. அதில் அக்டோபர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியிலேயே நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து நியூசிலாந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற 2வது போட்டியில் அதிரடிப் படையாக கருதப்படும் இங்கிலாந்து கடுமையான போராட்டத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆம் பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச தீர்மானித்து ஆரம்பம் முதலே அற்புதமான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை 19.4 ஓவரில் வெறும் 112 ரன்களுக்கு சுருட்டியது.

அப்படி ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் திணறிய ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக இப்ராகிம் ஜாட்ரான் 32 (32) ரன்களும் உஸ்மன் கானி 30 (30) ரன்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 113 என்ற எளிதான இலக்கை 10 ஓவர்களில் துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தை சுலபமாக எட்ட விடாமல் பந்து வீச்சில் மடக்கி பிடித்த ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடியது. ஏனெனில் அந்த அணியின் தரமான பந்து வீச்சில் கேப்டன் ஜோஸ் பட்லர் 18 (18) அலெக்ஸ் ஹேல்ஸ் 19 (20) டேவிட் மாலன் 18 (30) பென் ஸ்டோக்ஸ் 2 (4) ஹரி ப்ரூக் 7 (6) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க திண்டாடி ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

கலக்கிய சுட்டிக் குழந்தை:
இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் தப்பித்த இங்கிலாந்தை கடைசியில் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியான 29* (21) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். ஆனால் அதிரடியான இங்கிலாந்தை அதிரடியாக விளையாட விடாமல் வெறும் 113 ரன்களை குவிக்க 18.1 ஓவர்களை எடுத்துக் கொள்ள வைக்கும் அளவுக்கு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் சிறப்பாகவே செயல்பட்டது. ஒருவேளை அந்த அணி பேட்டிங்கில் இன்னும் 20 – 30 ரன்களை அதிகமாக எடுத்திருந்தால் இங்கிலாந்தின் பாடு திண்டாட்டமாகி இருக்கும் என்றே கூறலாம்.

ஆனால் அங்கே தான் இங்கிலாந்தின் வெற்றி நாயகன் நிற்கிறார் என்ற வகையில் முதலில் பந்து வீசிய இங்கிலாந்துக்கு அபாரமாக செயல்பட்ட இளம் வீரர் சாம் கரண் 3.4 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 2.73 என்ற அற்புதமன எக்கனாமியில் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனாலேயே சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளார் என்ற இரட்டை வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் ஜோஃப்ரா ஆர்ச்சர் உட்பட வேறு எந்த இங்கிலாந்து பந்து வீச்சாளரும் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்ற நிலைமையில் அவர் படைத்துள்ள இந்த சாதனையின் விவரப் பட்டியல் இதோ:
1. சாம் கரண் : 5/10, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, பெர்த், 2022*
2. அடில் ரசித் : 4/2, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, துபாய், 2021
3. கிறிஸ் ஜோர்டான் : 4/6, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, பேஸட்ரி, 2019
4. டேவிட் வில்லி : 4/7, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, பேஸட்ரி, 2019

கடந்த 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் சமீப காலங்களில் இது போல் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இங்கிலாந்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டராக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார். அதனாலேயே ஐபிஎல் தொடரில் 2019 சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியது. அதில் 2020 சீசனில் நிறைய போட்டிகளில் சின்ன சின்ன சேட்டைகளுடன் சிறப்பாக செயல்பட்ட இவரை தமிழக ரசிகர்கள் சுட்டிக் குழந்தை என அன்புடன் அழைக்கிறார்கள்.

இதையும் படிங்க : இப்படியும் அவுட்டாக முடியுமா பாவம், டேவிட் வார்னர் விக்கெட்டால் ரசிகர்கள் பரிதாபம் – வீடியோ உள்ளே

ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த வருடம் காயத்தால் பாதியிலேயே வெளியேறிய அவர் தற்போது குணமடைந்து மீண்டும் விளையாட துவங்கி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் தற்போது சென்னை அணியின் ஒப்பந்த வீரர்களில் ஒருவராக இல்லாத அவரை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் இந்த வருடம் ரன்களை வாரி வழங்கிய கிறிஸ் ஜோர்டானை கழற்றிவிட்டு எப்படியாவது வாங்கிவிடுமாறு சென்னை ரசிகர்கள் இப்போதே அந்த அணி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைப்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

Advertisement