எனது வாழ்நாளில் அவரை மாதிரி அற்புதமான ஒய்ட் பால் பிளேயரை பார்த்தில்லை – இந்திய வீரர் பற்றி ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் முன்னதாகவே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள ஹர்ஷல் படேல் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும் ஃபீல்டிங் துறையும் சற்று சொதப்பலாக செயல்படுவதால் இந்த உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறை சற்று அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அபாரமாக எதிர்கொண்டு ஏற்கனவே 24000+ ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

அற்புதமான வீரர்:
ஏனெனில் கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கிய அவர் ஜாம்பவான் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். அதிலும் டி20 உலக கோப்பையில் 800+ ரன்களைக் குவித்து 2014, 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த உலக கோப்பைகளில் தொடர்நாயகன் விருதுகளை வென்ற அவரிடம் ஏராளமான அனுபவமுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை தொடர் நடைபெறும் ஆஸ்திரேலியாவில் 2014 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 2 சதங்களை அடித்த அவர் 2015இல் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதமடித்தார்.

அதை விட 70 வருடங்களில் முதல் முறையாக 2019இல் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று முதல் ஆசிய கேப்டனாக சரித்திரம் படைத்த அவர் 33 வயதிலேயே ஜாம்பவானுக்கு நிகரான சாதனைகளைப் படைத்துள்ளார். அதனால் தனது அனுபவத்தையும் திறமையையும் வைத்து 2014, 2016இல் தவற விட்ட டி20 உலகக் கோப்பையை இம்முறை முத்தமிட அவர் தயாராகி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய வாழ்நாளில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியை போன்ற மகத்தான வீரரை பார்த்ததில்லை என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வென்ற பயிற்சி போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட அவர் இது பற்றி நேரலையில் பேசியது பின்வருமாறு. “அவர் கேப்டனாக இருந்த போது தன்னுடைய அணியை சிறப்பாக வழி நடத்தினார். அதிலும் குறிப்பாக அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது அற்புதமானது. மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட் வரலாற்றில் அவரை தவிர மிகச்சிறந்த வீரரை நான் பார்த்துள்ளேனா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் செய்துள்ள சாதனைகள் நம்ப முடியாதது. அவருடைய புள்ளி விவரங்கள் அளப்பரியது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல உலகிலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் 50+ பேட்டிங் சராசரி கொண்டுள்ள ஒரே வீரராக சாதனை படைத்து வரும் விராட் கோலி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரையும் மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்களை விளாசிய பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார். மேலும் 2010 – 2019 தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதை வென்றுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 2வது பேட்ஸ்மென் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையையும் (தலா 71) சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : கிரிக்கெட் பற்றி தெரியாதவங்கல்லாம் பிசிசிஐ செயலாளர் – ஜெய் ஷா’வை கடுமையாக விமர்சித்த பாக் ஜாம்பவான்

அப்படி தன்னுடைய சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலி நிச்சயமாக சச்சினின் 100 சாதனையை முறியடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா உட்பட வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடிய இதர வீரர்களை காட்டிலும் விராட் கோலி மகத்தானவர் என்று அவர் மேலும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement