பாபர் அசாமுடன் சேர்ந்து – போட்டி முடிந்தும் திருப்தியடையாமல் வெறியுடன் பயிற்சி செய்த விராட் கோலி – வீடியோ உள்ளே

Virat Kohli Babar Azam
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் தற்போது துவங்கியுள்ள முதல் சுற்றில் ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீசை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் என்ன திருப்பம் நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. அதில் வெற்றி பெறுவதற்காக அந்த 2 அணிகளும் அக்டோபர் 17ஆம் தேதியன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கின.

காபா மைதானத்தில் நடைபெற்ற அந்த பயிற்சி கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 57 (33) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 50 (33) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 186/7 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் நங்கூரமாக போராடிய கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (54) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் முறையாக பந்து வீசிய முகமது ஷமி 4 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

வெறியுடன் பயிற்சி:
அந்த போட்டிக்குப் பின் அதே மைதானத்தில் அடுத்ததாக இங்கிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. தங்கள் அணியில் நிலவும் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்ப்பதற்காக அப்போட்டியில் பாபர் அசாம் – முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்காத நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 160/8 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மக்சூட் 39 ரன்கள் எடுத்தார்.

அதை துரத்திய இங்கிலாந்துக்கு ஹரி ப்ரூக் 45* (24) சாம் கரண் 33* (14) பென் ஸ்டோக்கேஸ் 36 (18) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றி பெற வைத்தனர். முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (13) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் ஃபீல்டிங்கில் 19வது ஓவரில் அதிரடி வீரர் டிம் டேவிட்டை சூறாவளியாக பாய்ந்து ரன் அவுட் செய்த அவர் கடைசி ஓவரில் சூப்பர்மேனை போல் ஒற்றைக் கையில் தாவி கேட்ச் பிடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் போட்டி முடிந்து எஞ்சிய இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்குத் திரும்பிய நிலையில் தன்னுடைய பேட்டிங்கில் திருப்தியடையாத அவர் மட்டும் சுமார் 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் வியர்வை சொட்ட சொட்ட தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த போது இதே போல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பி விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அவர் அதே பார்மை இந்த முக்கியமான உலக கோப்பையில் தொடர விரும்புவதால் இப்படி தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதே மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் விராட் கோலி பயிற்சி எடுத்த பக்கத்து வலையிலேயே தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றதால் அவரும் முஹம்மது ரிஸ்வானும் அடித்தால் மட்டுமே பாகிஸ்தான் வெல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த இருவருமே விராட் கோலிக்கு அருகே தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டுமெனில் தங்களுடைய ஆட்டம் அவசியம் என்பதால் அவர்களும் விராட் கோலியை போலவே கடினமாக பயிற்சி எடுத்தனர். இப்படி 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருவதால் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடம் மேலும் எகிறியுள்ளது.

Advertisement