ரோல் மாடலே நீங்கதான் – பாக் வீரருக்கு ஆலோசனை வழங்கி பந்து வீசிய ஷமி – ரசிகர்கள் நெகிழும் வீடியோ இதோ

Mohammeed shami Shaheen Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீசை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து ஆரம்பத்திலேயே மிரட்டலான தொடக்கத்தை கொடுத்துள்ளது. அதனால் அக்டோபர் 23ஆம் தேதியன்று கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டியில் என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எகிறியுள்ளது. அதில் கடந்த முறை துபாயில் வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பையில் தங்களை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு இம்முறை தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்க தயாராகி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

அந்த வரிசையில் கடந்த வாரம் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற 2 போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த இந்தியா அக்டோபர் 17ஆம் தேதியன்று நடைபெற்ற அதிகாரபூர்வ பயிற்சி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. காபாவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 57 (33) ரன்களையும் சூர்யகுமார் யாதவ் 50 (33) ரன்களையும் அதிரடியாக எடுத்ததால் 20 ஓவர்களில் 186/7 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் நங்கூரமாக நின்ற கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (54) ரன்கள் குவித்து போராடி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ரோல் மாடல் நீங்கதான்:
அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது ஆச்சர்யப்படும் வகையில் முதல் முறையாக பந்து வீசிய முகமது சமி 4 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். கடைசியாக கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய அவரை 30 வயதாகி விட்டார் என்பதற்காக பிசிசிஐ கழற்றி விட்டது. ஆனாலும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதால் இந்த உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ள அவர் பயிற்சிப் போட்டியிலேயே அசத்தியுள்ளார்.

முன்னதாக பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இப்போட்டிக்கு அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் அப்போட்டிக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்ட முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள நட்சத்திரம் ஷாஹீன் அஃப்ரிடிக்கு வேகப்பந்து வீச்சு பற்றிய ஆலோசனைகளை கொடுத்தார்.

- Advertisement -

கடந்த வருடம் உலக கோப்பையில் முதல் முறையாக தோல்வியைப் பரிசளிக்க ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றியவர் என்பதையும் தாண்டி சீனியர் கிரிக்கெட்டர் என்ற முறையில் அவருக்கு ஷமி ஆலோசனைகள் வழங்கியதை பாகிஸ்தான் வாரியம் மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அந்த சந்திப்பின் போது “ஷமி பாய், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று நலம் விசாரித்த ஷாஹீன் அப்ரிடி “நான் கிரிக்கெட் விளையாட துவங்கியதிலிருந்தே உங்களைப் பின்பற்றி வருகிறேன். குறிப்பாக வேகப் பந்துகளை துல்லியமாக பிடித்து வீசும் உங்களது மணிக்கட்டை ஆரம்ப நாட்கள் முதலே பின்பற்றி வருகிறேன்” என எனது ரோல் மாடலே நீங்கள் தான் என்ற வகையில் ஷமியிடம் தெரிவித்தார்.

அதனால் மகிழ்ச்சியடைந்த முகமது சமி “பந்தை கையிலிருந்து வெளியிடும் இடம் சரியாக இருந்தால் பந்தின் சீம் பகுதி தாமாகவே சரியாக இருக்கும்” என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் சில பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் முகமது ஷமியை சந்தித்து தங்களுக்கு எதிராக சில பந்துகளை வீசுமாறு வெளிப்படையாக கேட்டனர். அதற்கு மறுப்புத் தெரிவிக்காத ஷமி செல்லுங்கள் நான் பந்து வீசுகிறேன் என்று பகையின்றி பாசத்துடன் நடந்து கொண்டார்.

இதையும் படிங்க : IND vs AUS : அடிக்குறான் பாரு, வேகமா போடு. தமிழில் டிப்ஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக் – அஷ்வின் அளித்த பதில்

இப்படி என்னதான் பரம எதிரிகளாக இருந்தாலும் செய்யும் வேலையில் வயதையும் திறமையும் மதித்து இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் எல்லைப் பிரச்சினை காரணமாக சமீப காலங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் எலியும் பூனையுமாக இருந்தாலும் இரு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இப்படி நண்பர்களாக பழகுவது வரவேற்கத்தக்கதாகும்.

Advertisement