அக்டோபர் 2ஆம் தேதியான நேற்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 237/3 ரன்களை குவித்து மிரட்டியது. ஆரம்பத்திலேயே தென் ஆப்பிரிக்கா பவுலர்களை பந்தாடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (37) ரன்களில் ஆட்டமிழக்க கேஎல் ராகுல் அதிரடியாக 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களில் அவுட்டானர்.

அந்த அபார தொடக்கத்தை பயன்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சூரியகுமார் யாதவ் வழக்கம்போல நாலாபுறமும் சுழன்றடித்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்களில் ரன் அவுட்டானார். அவருடன் விளையாடிய விராட் கோலி தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (28) ரன்களும் இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 17* (7) ரன்களும் எடுத்தனர்.
போராடிய வீண்:
அதை தொடர்ந்து 238 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 1/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்ற முயன்ற மார்க்ரம் 33 (19) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய டேவிட் மில்லர் தொடக்க வீரர் குவின்டன் டி காக் உடன் இணைந்து இந்திய பவுலர்களை பந்தாடினார்.

அதில் ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்தி நேரம் செல்லசெல்ல சரவெடியாக செயல்பட்ட மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்களும் டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாபிரிக்கா போராடி தோற்றது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏற்கனவே முதல் போட்டியிலும் வென்றிருந்த காரணத்தால் 2 – 0* (3) என்ற கணக்கில் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
ஹிட்மேன் சாதனைகள்:
1. இப்போட்டியில் மீண்டுமொரு முறை இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 400*
2. தினேஷ் கார்த்திக் : 368*
3. எம்எஸ் தோனி : 361
4. விராட் கோலி : 354*
5. சுரேஷ் ரெய்னா : 336

2. அதைவிட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2015இல் தோனி தலைமையிலும் (2 – 0 என தோல்வி) 2019இல் விராட் கோலி தலைமையிலும் (1 – 1 என சமன்) கடந்த ஜூலையில் ரிஷப் பண்ட் தலைமையிலும் (2 – 2 என சமன்) என வெற்றியை பெறாத இந்தியா முதல் முறையாக ரோகித் தலைமையில் சாதித்துள்ளது.
3. மேலும் இப்போட்டியும் சேர்த்து இந்த வருடம் 22 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை தகர்த்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 22* (2022)
2. எம்எஸ் தோனி : 21 (2016)

4. அதைவிட அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து தொடர்ச்சியாக அதிக இருதரப்பு தொடர்களில் வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 11*
2. விராட் கோலி : 10
5. மேலும் இந்த வருடம் கேப்டனாக 28 சிக்சர்களை அடித்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் என்ற புதிய உலகசாதனை படைத்துள்ளார்.

6. அதுபோக இப்போட்டியில் 43 ரன்களை விளாசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 500 ரன்களை குவித்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 526*
2. விராட் கோலி : 466 (2019)
3. ரோஹித் சர்மா : 305 (2018)
7. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 முறை ஒரு காலண்டர் வருடத்தில் 500 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 590 (2018)
2. ரோஹித் சர்மா : 526* (2022)
இதையும் படிங்க : தோல்வி வரலாற்றை மாற்றிய இந்தியா – தெ.ஆ’வுக்கு எதிராகவும் டி20 கிரிக்கெட்டிலும் புதிய உலக சாதனை
8. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு வீரர்களுடன் 10 முறை 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். தவானுடன் (11), ராகுலுடன் (10)



