வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிக நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையில் நடப்புச் சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரிலிருந்து தான் இறுதிக்கட்ட டி20 உலகக்கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்திய ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுத்து அட்டகாசமாக செயல்பட்டு வருவதால் இந்திய அணி பலமாகியுள்ளது.

ஆனால் அவருக்கு அடுத்தபடியாக நம்பர்-1 சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜா இந்த தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ளது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியில் விளையாடி வரும் இவர் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகச்சிறந்த இன்னிங்க்ஸ் விளையாடியது முதல் பேட்டிங்கில் மிகப் பெரிய எழுச்சி கண்டு 3 வகையான இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். மேலும் உலகின் நம்பர் ஒன் பீல்டராக போற்றப்படும் அளவுக்கு அபார வளர்ச்சி கண்ட அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கொடுக்கப்பட்ட தேவையற்ற கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பார்மை இழந்து காயத்தால் வெளியேறினார்.
மீண்டும் காயம்:
அதனால் டி20 உலகக்கோப்பையில் இடம் பிடிக்க மாட்டார் என்று கருதப்பட்ட இவர் அதிலிருந்து குணமடைந்து சமீபத்திய இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய தொடர்களில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு ஆசிய கோப்பையில் தேர்வானார். அதில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் பாண்டியாவுடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 35 ரன்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அதனால் முதலில் ஆசிய கோப்பையிலிருந்து மட்டும் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட அவருடைய காயத்தை சோதித்து பார்த்ததில் குணமடைய நிறைய நாட்கள் தேவைப்படுவதால் டி20 உலக கோப்பையில் இருந்தும் விலகுவதாக செய்திகள் வெளியாகின.

உண்மையான அப்டேட்:
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ளதால் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஜடேஜா அதிலிருந்து குணமடைந்து திரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அதனால் தற்போதைய நிலைமையில் உலக கோப்பையிலிருந்து அவர் விலகி விட்டார் என்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ள அவர் கடைசி நேரத்தில் குணமடைந்தால் கூட அணியில் நேரடியாக சேர்க்கப்படுவார் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜா முழங்கால் காயத்தை சந்தித்துள்ளார். அதனால் ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியுள்ள அவர் மருத்துவர்களின் கண்காணிப்புக்கு சென்று அவர்களுடைய ஆலோசனைகளையும் வழி முறைகளையும் பின்பற்றி வருகிறார். உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நேரங்கள் இருப்பதால் அதிலிருந்து அவர் விலகி விட்டார் அல்லது விலகவில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை. நாங்கள் அவர் குணமடைவதை பொறுத்திருந்து பார்க்க உள்ளோம்”

“விளையாட்டில் இதுபோல் வீரர்கள் காயமடைவது சகஜமானதாகும். அதிலிருந்து விரைவில் குணமடைய அவருக்கு உதவுவது எங்களது வேலையாகும். இவை அனைத்தும் அவர் எந்தளவுக்கு குணமடைகிறார் என்பதைப் பொறுத்தது. எனவே அவரது காயத்தை பற்றிய முழுமையான விவரம் தெரியும் வரை அவர் உலகக் கோப்பையிலிருந்து விலகி விட்டார் என்பது போன்ற கருத்துக்களைக் கூற நான் விரும்பவில்லை. நாங்கள் பொறுத்திருந்து தெளிவான தகவல்களுக்காக காத்திருக்கிறோம். குறிப்பாக உலக கோப்பைக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் இருப்பதால் அவசரப்பட தேவையில்லை” என்று கூறினார்.
ஏற்கனவே காயத்தால் ஜடேஜா உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்றுதான் செய்திகள் வெளியானது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் விரைவில் குணமடைந்த ஜடேஜா கடந்த ஒரு மாதமாக இந்தியாவுக்காக விளையாடி அசத்தினார். அதேபோல் விரைவில் காயத்திலிருந்து குணமடையும் பட்சத்தில் நிச்சயமாக அவர் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று ரசிகர்களுக்கு டிராவிட் தெளிவுபடுத்தியுள்ளார்.


