ENG vs RSA : மிரட்டிய இங்கிலாந்தை 6 வருடங்கள் கழித்து வந்து அடித்து நொறுக்கிய தெ.ஆ வீரர் – அபார வெற்றியின் முழுவிவரம்

Rilee Rossouw
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்ற நிலையில் 3-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 – 1 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் சரவெடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து 234 ரன்கள் குவித்து பின்னர் தென் ஆப்பிரிக்காவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 28-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு துவங்கியது. கார்டிப் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் 15 (11) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய ரிலீ ரோசௌவ் மற்றொரு தொடக்க வீரர் ஹென்றிக்ஸ் உடன் இணைந்து அதிரடியான பேட்டிங்கில் வெளிப்படுத்தி விரைவாக ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மிரட்டிய ரோசௌவ்:
4-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 12-வது ஓவர் வரை அதிரடியான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களின் அணியை வலுப்படுத்திய போது 3 பவுண்டரி 2 சிக்சருடன் ஹென்றிக்ஸ் 53 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (10) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்த ரோசௌவ் 10 பவுண்டரி 5 சிக்சருடன் 96* (55) ரன்களை 174.55 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில் பவுண்டரியை அடிக்க தவறிய அவர் தென் ஆப்பிரிக்காவை 20 ஓவர்களில் 207/3 ரன்கள் குவிக்க கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதை தொடர்ந்து 208 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து கடந்த போட்டியில் 234 ரன்கள் அடித்திருந்ததால் எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 29 (14) ரன்களில் ஆட்டமிழக்க ஜேசன் ராய் 20 (22) ரன்களிலும் டேவிட் மாலன் 5 (4) ரன்களிலும் அவுட்டானார்கள்.

தென்ஆப்பிரிக்கா பதிலடி:
அந்த நிலைமையில் களமிறங்கிய மொயீன் அலி 3 பவுண்டரியுடன் 28 (17) ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரியுடன் 30 (21) ரன்களும் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அப்படி களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து வெறும் 149 ரன்களுக்குச் சுருண்டது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி மற்றும் ஆண்டிலோ பெலுக்வியோ தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த தென்னாப்பிரிக்கா முதல் போட்டியில் தங்களை புரட்டி எடுத்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஆச்சரியமின்றி இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிலீ ரோசௌவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

6 வருடங்கள்:
தென் ஆப்பிரிக்காவுக்காக டி20 கிரிக்கெட்டில் கடந்த 2014இல் அறிமுகமான இவர் கடைசியாக கடந்த 2016இல் இந்திய மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடியிருந்தார். அந்த சமயத்தில் சுமாராக செயல்பட்டதால் ஒரேடியாக கழற்றிவிடப்பட்ட அவர் 6 வருட போராட்டத்திற்கு பின் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் ஒரு வழியாக இந்த இங்கிலாந்து தொடரில் தேர்வாகியுள்ளார். அதில் முதல் போட்டியில் 4 ரன்களில் அவுட்டானாலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த 2-வது போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று அபாரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜிம்பாப்வேயில் சதமே அடித்தாலும் பயனில்லை, அவர் வழியில் விடுங்க – விராட் கோலி பற்றி முன்னாள் நியூசி வீரர் கருத்து

இதனால் மிகவும் உணர்ச்சியடைந்த அவர் போட்டி முடிவில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு காலத்தில் சுமாராக இருந்த நான் தற்போது நல்ல வீரராக மாறியுள்ளதாக உணர்கிறேன். இது மிகவும் ஸ்பெஷலானது. இந்த தருணத்தில் இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொறுத்தவரை எனது வாழ்நாளில் இன்றைய நாள் மிகவும் உணர்ச்சியுடன் கூடிய பெருமை மிகுந்த நாளாகும்” என்று கூறினார். இதையடுத்து இத்தொடரின் கடைசி போட்டி ஜூலை 31இல் நடைபெறுகிறது.

Advertisement