IND vs WI : இருந்தாலும் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கக்கூடாது – கடைசி நேரத்தில் இந்தியாவை தண்டித்த ஐசிசி, முழுவிவரம்

IND vs WI Mohammed Siraj India Shikhar Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது. கடந்த ஜூலை 22இல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இருக்கும் குயின்ஸ் பார்க் மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 308/7 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 97 ரன்கள் சுப்மன் கில் 64 ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 75 ரன்களும் ப்ரெண்டன் கிங் 54 ரன்களும் எடுத்து போராடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து கடைசி நேரத்தில் கச்சிதமாக செயல்பட்ட இந்தியாவுக்கு எதிராக தடுமாறிய அந்த அணி 50 ஓவர்களில் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

2வது போட்டி:
அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 24-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் துவங்கியது. சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இப்போட்டியில் வென்றால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான வாழ்வா – சாவா என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

மறுபுறம் முதல் போட்டியில் நூலிழையில் சற்று அதிர்ஷ்டத்துடன் வெற்றி பெற்ற இந்தியா 2-வது போட்டியில் அபாரமாக செயல்பட்டு 2 – 0 (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது. அதற்காக முதல் போட்டியில் சுமாராக செயல்பட்ட பிரஸித் கிருஷ்ணாவை நீக்கிவிட்டு மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

கடைசி நேரத்தில்:
அதை தொடர்ந்து துவங்கிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை துவங்கி ரன்களை குவித்துக் கொண்டிருந்த நிலையில் ஐசிசி வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் கலகலப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ஏனெனில் முதல் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு அந்த போட்டியின் சம்பளத்தில் இருந்து 20% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அதிரடியாக அறிவித்தது. பொதுவாக ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அந்த போட்டியின் முடிவு மற்றும் வீரர்களின் நடத்தை பற்றி அதன் நடுவர் ஐசிசிக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்.

அந்த வகையில் முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் வீசுவதற்கு அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டதை நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் புகாராக அளித்திருந்தார். அதை தொடர்ந்து அடிப்படை விதி முறைப்படி ஒவ்வொரு ஓவருக்கும் 20% என்ற வகையில் இந்தியாவுக்கு இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. வழக்கம் போல இந்த தவறை கேப்டன் ஷிகர் தவான் இந்திய அணி நிர்வாகம் சார்பில் ஒப்புக் கொண்டதால் அதற்காக விசாரணை தேவையில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இவ்ளோ ஸ்ட்ரிக்ட்:
இருப்பினும் வழக்கமாக எந்த சர்வதேச போட்டியாக இருந்தாலும் அதில் மெதுவாக ஓவர் வீசப்பட்டிருந்தால் அடுத்த நாள் காலையிலேயே அபராதம் உட்பட அதிரடி நடவடிக்கைகளை ஐசிசி எடுப்பதே வழக்கமாகும். ஆனால் இந்தப் போட்டி முடிந்து ஒரு நாள் கடந்து 2-வது போட்டி துவங்கி ஒரு மணி நேரம் கடந்த பின்பு அவசரமாக விதிக்கும் அளவுக்கு ஐசிசி சோம்பேறித்தனமாக செயல்படுகிறதா என்று ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

அத்துடன் வெறும் 1 ஓவர் குறைவாக வீசியதற்காக கடைசி நேரத்தில் தண்டிக்கும் அளவுக்கு ஐசிசி இவ்வளவு ஸ்ட்ரிக்டாக நடந்து கொள்கிறது எனவும் ரசிகர்கள் கிண்டலாக கூறுகின்றனர். மேலும் இனிமேலாவது இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ரசிகர்கள் கலகலப்புடன் ஐசிசிக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.

Advertisement