தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அண்மையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்தது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வரும் வேளையில் இந்த சுற்றுப்பயணத்தை முடித்த கையோடு இந்திய அணியானது நேரடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்து அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இந்த தொடருக்கான ஒருநாள் அணியை ஏற்கனவே அறிவித்த பிசிசிஐ தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை இன்று அறிவித்தது. அதன்படி இன்று வெளியாகிய இந்த டி20 தொடருக்கான அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஃபார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலிக்கு பும்ராவுடன் சேர்த்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
விராட் கோலி தவிர்த்து இளம் வீரர்கள் பலரும், தமிழக வீரர் அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்கள். ரோஹித் தலைமையிலான இந்த டி20 அணியில் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த டி20 தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளித்தது நியாயம்தான் என்றாலும் பார்மின்றி தவித்து வரும் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டதா? அல்லது பிசிசிஐ அவரை திட்டமிட்டு வெளியேற்றி அவருக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்டு வர நினைக்கிறதா? என்ற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.

ஏனெனில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை வரும் வேளையில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடினால் மட்டுமே மீண்டும் கோலி பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் இந்த டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் தனக்கு கிடைக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வரும் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் காரணமாகவே தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவரை ஓரங்கட்டவே இந்திய அணி நிர்வாகம் இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் சில தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : நாங்க விளையாடுன அப்போ இவரை மாதிரி ஒரு வீரர் இல்லை. அவரை விட்றாதீங்க – சையத் கிர்மானி வேண்டுகோள்
மேலும் விராட் கோலியின் இடத்திற்கு தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ராகுல் திரிப்பாதி போன்ற வீரர்கள் வரிசை கட்டி நிற்பதாலும் அவருக்கு இந்த கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வேண்டும் என்பதே பலரது ஒருமித்த கருத்தாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



