IND vs ENG 2வது டி20 : தொடரை வென்று பழிதீர்க்குமா இந்தியா, பர்மிங்காம் மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Edjbaston Birmingham Cricket Stadium Ground
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7-ஆம் தேதியன்று துவங்கியது. சௌதம்ட்டன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் அட்டகாசமாக செயல்பட்டு பந்துவீச்சில் கச்சிதமாக செயல்பட்ட இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அமர்க்களமான வெற்றியை பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஜோஸ் பட்லர் தலைமையில் லியம் லிவிங்ஸ்டன், ஜேசன் ராய், மொய்ன் அலி, போன்ற தரமான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உட்பட நல்ல பார்மில் இருக்கும் தரமான வீரர்களை கொண்ட இந்தியா சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்ததற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் இந்திய வீரர்களும் ரசிகர்களும் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படும் நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 9-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியா தலை குனியும் அளவுக்கு 378 ரன்களை அசால்டாக துரத்திய இங்கிலாந்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

பழிதீர்க்குமா இந்தியா:
எனவே அதே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மீண்டும் முதல் போட்டியைப் போலவே பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் தரமாக செயல்பட்டு கோப்பையை கைபற்றி ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முதல் போட்டியில் அஜாக்கிரதையாக இருந்த இங்கிலாந்து 2-வது போட்டியில் இரு மடங்கு வேகத்துடன் திருப்பி அடிக்கும் என்பதால் வெற்றியை பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்காது.

குறிப்பாக முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன் போன்ற அதிரடி வீரர்கள் 2-வது போட்டியில் இந்தியாவை சொந்த மண்ணில் வெறித்தனமாக புரட்டி எடுக்க முயற்சிப்பார்கள். எனவே அதை சமாளிக்க இம்முறை ரோகித் சர்மா இருப்பதால் அவரது தலைமையில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரில் கோட்டைவிட்ட கோப்பையை டி20 தொடரில் கைப்பற்ற இந்தியா போராட தயாராகியுள்ளது. சரி இப்போட்டியை முன்னிட்டு போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

எட்ஜ்பஸ்டன் மைதானம்:
பார்மிங்கம் நகரில் உள்ள இந்த அழகான மைதானத்தில் கடந்த 1902 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2010 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. 25000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 5 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆச்சர்யப்படும் வகையில் அந்த 5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அபார வெற்றி பெற்றுள்ளன.

- Advertisement -

2. இம்மைதானத்தில் வரலாற்றில் 3 போட்டிகளில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து 3 முறையும் வென்று தனது கோட்டையாக வைத்துள்ளது. இப்போட்டியில் இந்தியா கடந்த 2014இல் களமிறங்கிய ஒரே போட்டியிலும் இங்கிலாந்து வென்றது.

3. இயன் மோர்கன் 71 (31) ரன்கள் அதிரடியில் இங்கிலாந்து நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 66 (41) ஷிகர் தவான் 33 (28) சுரேஷ் ரெய்னா 25 (20) ரன்கள் எடுக்க கடைசியில் கேப்டன் எம்எஸ் தோனி 27* (18) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இம்முறை இங்கு இங்கிலாந்தை தோற்கடிக்க கவனத்துடன் இந்தியா விளையாட வேண்டியுள்ளது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
டெஸ்ட் போட்டியை போல் அல்லாமல் இம்முறை இந்த டி20 போட்டி நடைபெறும் நாளன்று பர்மிங்காம் மைதானத்தில் மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்ற நிலையில் லேசான மேகமூட்டத்துடன் வானம் காட்சியளிக்கும் என்பதால் இப்போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் வரலாற்றில் பெரும்பாலும் பேட்டிங்க்கே அதிக சாதகமாக இருந்து வருகிறது. அதிலும் இங்கிலாந்து 378 ரன்களை சேசிங் செய்யும் அளவுக்கு டெஸ்ட் போட்டியிலேயே பேட்டிங்க்கு கைகொடுத்த இம்மைதானத்தில் 3 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் இப்போட்டியிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம். எனவே இப்போட்டியில் நிதானத்துடன் அதிரடியை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ரன் மழை பொழியலாம்.

இருப்பினும் பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்காமல் இருக்காது. மிடில் ஓவர்களில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தும் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸை 170 ஆகும். மேலும் இங்கு வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் யோசிக்காமல் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுத்தால் வெற்றி ஆரம்பத்திலேயே உறுதியாகிவிடும்.

Advertisement