இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 412 ரன்கள் சேர்த்தது. ஏனென்றால் சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தின் அற்புதமான பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

அதனால் 98/5 என தத்தளித்த இந்தியா 200 ரன்களை தாண்டாது என்று ரசிகர்கள் பயந்த வேளையில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் நங்கூரத்தை போல அபாரமாக பேட்டிங் செய்தனர். அதில் ஒருபுறம் ஜடேஜா பொறுமையாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட அனைத்து இங்கிலாந்து பவுலர்களையும் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதமடித்து 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து டி20 இன்னிங்ஸ் விளையாடி ஆட்டமிழந்தார்.
எதிர்பாரா பும்ரா:
அவரை தொடர்ந்து மறுபுறம் நங்கூரமாக நின்ற ரவீந்திர ஜடேஜா 2-வது நாளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இப்போட்டியில் இந்தியாவை வழிநடத்தும் கேப்டனாக களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரில் 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என 2 நோபால் உட்பாட யாருமே எதிர்பாராத வகையில் 35 ரன்களை தெறிக்க விட்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற மெகா உலகசாதனை படைத்தார்.

கடைசி வரை அவுட்டாகாமல் அவர் 31* (16) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 84/5 என்ற நிலைமையில் தடுமாறி வருகிறது. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 0* மற்றும் ஜானி பேர்ஸ்டோ 12* ரன்களுடன் இருக்க பந்துவீச்சிலும் மிரட்டிய பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால் இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
3 சாதனைகள்:
முன்னதாக இப்போட்டியில் கேப்டனாக செயல்பட இருந்த ரோகித் சர்மா கடைசி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு விலகியதால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்து அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற அச்சம் ரசிகர்களிடம் காணப்பட்டது. ஆனால் என்னை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற வகையில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சக்கை போடு போட்டுள்ள அவர் நான் இருக்கும் வரை பயம் வேண்டாம் என்ற வகையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

இப்போட்டியில் தன்னை தாக்க நினைத்த ஸ்டூவர்ட் பிராட்க்கு தக்க பதிலடியாக யுவராஜ் சிங்கை போல 35 ரன்களை வெளுத்து வாங்கி அவர் படைத்த உலக சாதனை அனைவராலும் பேசப்படுகிறது. இருப்பினும் அதுபோக அவர் படைத்த மேலும் ஒருசில ரசிகர்கள் அறியாத சாதனைகளை பற்றி பார்ப்போம்.
1. இப்போட்டியில் அறிமுக கேப்டனாக விளையாடும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 10-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற புதிய வரலாற்று சாதனையையும் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா : 31* ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, பர்மிங்காம், 2022*
2. பிஷன் பேடி : 30 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக, கிறிஸ்ட்சர்ச், 1976
2. அத்துடன் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 அல்லது 11-வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா : 31* ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
2. பாப் வில்ஸ் : 28 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக, 1982
3. பாப் வில்ஸ் : 28 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக, 1982
4. சீனிவாசன் வெங்கட்ராகவன் : 28 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 1979

3. மேலும் 193.75 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 31* (16) ரன்களை குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தது 30 ரன்கள் அடித்த ஒரு இன்னிங்சில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட இந்திய கேப்டன் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். அத்துடன் உலக அளவில் 3-வது கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : IND vs ENG : என்றுமே விராட் கோலி லீடர் தான். இந்திய வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த ஸ்பீச் – வைரலாகும் வீடியோ
அந்த பட்டியல்:
1. ஸ்டீபன் பிளெமிங் : 281.81, தென்னாபிரிக்காவுக்கு எதிராக
2. ஷாஹித் அப்ரிடி : 206.66, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. ஜஸ்பிரித் பும்ரா : 193.75, இங்கிலாந்துக்கு எதிராக*
4. விவ் ரிச்சர்ட்ஸ் : 189.65, இங்கிலாந்துக்கு எதிராக



