இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கியுள்ள 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. கடந்த 2021இல் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சாய்த்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி இப்போது நடைபெறுகிறது. இப்போட்டியில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டு விலகியதால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
6 கேப்டன்கள்:
அதை தொடர்ந்து இந்தியாவின் 36-வது டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 36 வருடங்கள் கழித்து இந்தியாவை வழிநடத்தும் 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அதைவிட அவரையும் சேர்த்து இந்த வருடம் 6 வெவ்வேறு வீரர்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது வேடிக்கையான அம்சமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி 2022 புத்தாண்டில் இந்தியாவின் முதல் போட்டியாக நடைபெற்றது.
1. அதில் விராட் கோலி காயமடைந்த நிலையில் ரோகித் சர்மா ஏற்கனவே காயமடைந்து இந்தியாவில் இருந்ததால் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இந்தியா தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த 3-வது போட்டியில் விராட் கோலி கேப்டன்ஷிப் செய்த போதிலும் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
2. அதன்பின் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா இந்தியாவை வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.
3. பின்னர் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா ஓய்வெடுத்தால் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் 2 – 2 என்ற கணக்கில் இந்தியா போராடி சமன் செய்தது.
4. அதையடுத்து தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றதால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இந்தியா 2 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
5. தற்போது பும்ரா 6-வது கேப்டனாக இந்தியாவை வழி நடத்துகிறார். இப்படி ஒரு வருடத்தில் 6 வீரர்கள் இந்தியாவை வழி நடத்துவது 90 வருட இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 1959இல் ஹேமு அதிகாரி, டாட்டா கைக்வாட், வினோ மன்கட், குலாப்ராய் ராம்சந்த், பங்கஜ் ராய் ஆகிய 5 வீரர்கள் கேப்டனாக செயல்பட்டதே வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது
கழுத்தை பிடித்து:
இத்தனைக்கும் இந்த வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே நிறைவுற்றுள்ள நிலையில் மாதத்திற்கு ஒருவர் கேப்டனாக இருந்ததை இந்த செய்தி தெளிவாக காட்டுகிறது. பொதுவாக சர்வதேச அரங்கில் ஒரு அணி வெற்றி பெறுவதற்கு முதலில் நிலையான கேப்டன் அமைய வேண்டும். அப்போதுதான் அந்த ஒருவரால் நல்ல தரமான வீரர்களை கண்டறிந்து உலகக்கோப்பை போன்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட முடியும். அப்படிப்பட்ட நிலையில் 6 மாதங்களில் 6 கேப்டன்கள் என்ற செய்தி தற்போதைய இந்திய கிரிக்கெட்டில் ஒரு சீரற்ற தன்மை நிலவுவதை வெளிச்சமாகியுள்ளது.
இவை அனைத்துக்கும் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விராட் கோலியை கழுத்தை பிடித்து பிசிசிஐ தள்ளாமல் தள்ளியதே காரணமென்று அவரின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் எம்எஸ் தோனிக்கு பின் 2014 முதல் டெஸ்ட் 2017 முதல் 3 வகையான இந்திய அணியையும் வெற்றிகரமாக வழிநடத்திய அவர் 90% போட்டிகளில் காயத்தால் விலகியதே கிடையாது. மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அவரது தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா பல சரித்திர வெற்றிகளைப் பெற்றது.
அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக 7-வது இடத்தில் திணறிய இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை உலகின் நம்பர்-1 அணியாக வலம் வர வைத்த அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் ஒரு உலக கோப்பையை வாங்கி தரவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த அவர் 2021 டி20 உலகக்கோப்பையுடன் விடை பெறுவதாக தாமே அறிவித்ததுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக இருப்பேன் என்று தெரிவித்தார்.
ஆனால் வெள்ளைப் பந்து எனப்படும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக ஒருநாள் பதவியிலிருந்து நீக்கி அந்த பொறுப்பை ரோகித் ஷர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த அவர் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை படைத்திருந்த போதிலும் வெளி உலகிற்கு பணிச்சுமையால் விலகுகிறேன் எனக்கூறி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க : IND vs ENG : இதுவரை இல்லாத வரலாற்று சாதனையை படைக்க இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் – பொன்னான வாய்ப்பு
தற்போது 6 மாதங்கள் கழித்து பார்க்கும் போது அவரைதவிர 5 கேப்டன்களிடையே கேப்டன்ஷிப் கைமாறியுள்ளது. அவரைப் போன்ற ஒரு நல்ல ஃபிட்டான தரமான கேப்டன் பிசிசிஐக்கு கிடைக்கவில்லை என்பதை காட்டுவதாக விராட் கோலியின் ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.



