இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றில் தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு வெளியேறிய நிலையில் மும்பை, பெங்கால் உள்ளிட்ட 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து ஜூன் 6இல் துவங்கிய நாக்-அவுட் சுற்றில் காலிறுதியில் வென்ற அணிகள் ஜூன் 14இல் அரையிறுதி சுற்றில் மோதின. அதில் பெங்களூருவில் நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் 41 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பையை உத்தரப்பிரதேசம் எதிர்கொண்டது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் தொடக்க வீரர் யஷஎஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து 100 ரன்களும் ஹர்டிக் டாமோர் சதமடித்து 115 ரன்களும் எடுத்தனர். உத்தரப்பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கரண் ஷர்மா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய உத்தரப்பிரதேசம் வெறும் 180 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சிவம் மாவி 48 ரன்கள் எடுத்தார்.
ஆமையும் – முயலும்:
அதனால் 213 ரன்கள் பெரிய முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பைக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பிரிதிவி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்கும் வகையில் பேட்டிங் செய்தார்கள் என்றே கூறலாம். ஆம் இதற்கு முன் ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாட தெரிந்த இவர்களில் பிரிதிவி ஷா எரிமலையை போல முதல் ஓவரில் இருந்தே பவுண்டரிகளை பறக்கவிட்டு அதிரடியாக ரன்களை குவித்தார். ஆனால் மறுபுறம் பாறாங்கல்லை போல நின்ற ஜெய்ஸ்வால் எதிரணி வீசி அத்தனை பந்துகளையும் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் மும்பை எடுத்த 51/0 ரன்களில் ஷா மட்டும் தனி ஒருவனாக 50* ரன்கள் எடுக்க ஜெய்ஸ்வால் 0* ரன்கள் மட்டுமே எடுத்து ஆச்சரியத்தை கொடுத்தார். இறுதிவரை மும்பை எடுத்த 66 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் முயலைப் போல முன்னால் இந்தியா அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை போல பட்டையை கிளப்பிய ஷா 12 பவுண்டரியுடன் 64 (71) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டானதும் ஒருவழியாக ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போல் சந்தித்த 54-வது பந்தில் பவுண்டரியுடன் முதல் ரன்னை எடுத்த ஜெய்ஸ்வாலை எதிரணியான உத்தரப்பிரதேச அணியினர் கலகலப்புடன் பாராட்டு தெரிவிக்க அவரும் அதை ஏற்றுக் கொண்டு பேட்டை உயர்த்தி காட்டினார்.
பைனலில் மும்பை:
ஆனால் அதன்பின் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 23 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 181 ரன்கள் அடிக்க அவருடன் அசத்திய அர்மன் ஜாபர் சதமடித்து 127 ரன்கள் எடுத்தார். இறுதியில் சர்ப்ராஸ் கான் 59* ரன்களும் சம்ஸ் முலானி 51* எடுத்ததால் 553/4 ரன்கள் எடுத்திருந்தபோது மும்பை தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதற்குள் 5 நாட்களும் முடிவடைந்ததால் இப்போட்டி டிராவில் முடிவடைந்தாலும் புள்ளி பட்டியலில் டாப் இடத்தை பிடித்த மும்பை மீண்டுமொரு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இப்போட்டியில் 2-வது இன்னிங்ஸ்சில் மும்பை எடுத்த 66 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் 64 ரன்கள் எடுத்த பிரிதிவி ஷா முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட 50+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற 136 வருட உலக சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. 66 ரன்களில் 64 : 96.96% ரன்கள் – பிரிதிவி ஷா, ஜெய்ஸ்வால் உடன், மும்பைக்காக, உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*
2. 86 ரன்களில் 82 : 95.34% ரன்கள் – பெர்சி மெக்டொனால், அலெக் பேனர்மேன் உடன், ஆஸ்திரேலியன்ஸ் அணிக்காக, நார்த் அணிக்காக, 1888
பேட்டால் கேள்வி:
இப்படி அசத்தலாக பேட்டிங் செய்த இவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் காய்ச்சல் காரணமாக முழுமையாக விளையாடாமல் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் தற்போதைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இவரின் பெயர் இடம்பெறவில்லை. அந்த அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் தான் இந்த அளவுக்கு வெறித்தனமாக பேட்டிங் செய்த அவர் “என்னை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை” என்று பேட்டால் தேர்வு குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தனைக்கும் ஐசிசி அண்டர்-19 உலககோப்பை 2018, விஜய் ஹசாரே கோப்பை 2021 ஆகிய கோப்பைகளை கேப்டனாக வென்று காட்டியுள்ள இவர் தற்போது ரஞ்சி கோப்பையில் தனது மும்பையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனவே கேப்டன்ஷிப் அனுபவமும் உள்ள தம்மை இந்திய அணி நிர்வாகம் வருங்காலத்தில் தேர்வு செய்ய தகுதியானவராக இவர் விளையாடி வருகிறார்.


