பட்லர் போராட்டம் வீண் ! அன்றும் இன்றும் ராசியில்லா ரன் அவுட், மீண்டும் வருமா ராஜஸ்தான்

Jos Buttler 89
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் மே 24-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற முக்கியமான குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Sanju Samson v GT

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கிய தேவ்தூத் படிக்கல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (20) ரன்களில் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்ரோன் ஹெட்மையர் 4 (7) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் ஆரம்பம் முதல் நங்கூரமாக நின்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 12 பவுண்டரி 2 சிக்சருடன் 89 (56) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.

குஜராத் வெற்றி:
அதை தொடர்ந்து 189 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரித்திமான் சாஹா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தாலும் அடுத்த ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சமமாக்கினர். இதில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் சுப்மன் கில் 35 (31) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் மேத்யூ வேட் 6 பவுண்டரியுடன் 35 (30) ரன்களில் அவுட்டானார். அதனால் 85/3 என மீண்டும் தடுமாறிய அந்த அணிக்கு களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா நங்கூரமாக நின்று அதிரடி காட்ட அவருக்கு உறுதுணையாக டேவிட் மில்லர் அவரைவிட அதிரடி காட்டினார்.

Miller 2

கடைசி நேரத்தில் ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடியில் கேப்டன் பாண்டியா 5 பவுண்டரியுடன் 40* (27) ரன்கள் எடுக்க மறுபுறம் அனலாக பேட்டிங் செய்த மில்லர் பிரஸித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டு 3 பவுண்டரி 5 சிக்சருடன் 68* (38) ரன்கள் குவித்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.3 ஓவரில் 191/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஏற்கனவே லீக் சுற்றில் அசத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் தனது முதல் சீசனிலேயே நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ராசியில்லா ரன் அவுட்:
இந்த வெற்றிக்கு 68 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு 89 ரன்கள் குவித்த பட்லரின் போராட்டம் வீணானது. ஏனெனில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் முதல் 7 போட்டிகளில் மிரட்டலாக 3 சதங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசமாக்கிய அவர் அடுத்த 7 போட்டிகளில் அப்படியே நேர்மாறாக சொதப்பி ரன்கள் குவிக்க திணறினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முக்கியமான போட்டியிலும் ஜெய்ஸ்வால் 3 ரன்களில் அவுட்டான நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் அதிரடியாக எடுத்து சென்ற நிலையில் மறுபுறம் 16 ஓவர்கள் வரை தடுமாறிக் கொண்டிருந்த அவர் முதல் 38 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ஆனால் அதன்பின் அந்நியனாக மாறிய அவர் கடைசி 4 ஓவர்களில் பட்டாசாக பேட்டிங் செய்து அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை விளாசி ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நடைபெற்ற பிளே ஆப் போட்டிகளில் 80 ரன்களுக்கு மேல் எடுத்த பின் ரன் அவுட்டான 3-வது பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றார்.

துரதிர்ஷ்டவசமாக அந்த 3 பேட்ஸ்மேன்களின் போராட்டமுமே வீணானது.
1. 2014இல் பஞ்சாப்புக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வெறும் 25 பந்துகளில் 87 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னா ரன் அவுட்டானது ரசிகர்கள் மறக்க முடியாது.
2. 2019 ஐபிஎல் பைனலில் ஷேன் வாட்சன் ரத்தம் சொட்ட சொட்ட 80 ரன்கள் விளாசி போராடி ரன் அவுட்டானதையும் ரசிகர்கள் மறக்க முடியாது.

Watson 1

மீண்டும் ராஜஸ்தான்:
அந்தப் போட்டிகளில் சென்னை தோற்றது போலவே இப்போட்டியில் ராசியில்லாமல் ராஜஸ்தான் தோற்றுள்ளது. இருப்பினும் இதுவரை 15 போட்டிகளில் 718 ரன்களை எடுத்துள்ள பட்லர் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வலுவாக வைத்துள்ளார். மேலும் இப்போட்டியில் ராஜஸ்தான் தோற்றாலும் கூட மீண்டும் ஒரு வாய்ப்பாக இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் வரும் மே 27இல் மீண்டும் குவாலிபயர் 2 போட்டியில் மோதுகிறது. அப்போட்டியில் வென்றால் ராஜஸ்தான் அணியால் பைனலுக்குள் நுழைய முடியும்.

Advertisement