1 ரன்னில் தவறிப்போன இரட்டைசதம் ! 145 வருட டெஸ்ட் வரலாற்றில் பரிதாபத்தை பெற்ற நட்சத்திர இலங்கை வீரர்

Angelo Mathews
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மே 15-ஆம் தேதியன்று வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் திமுத் கருணரத்னே 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் பெர்னாண்டோ 36 ரன்களில் நடையைக் கட்டினார்.

Karunaratne

- Advertisement -

அதனால் 66/2 என சுமாரான தொடக்கம் பெற்ற இலங்கைக்கு அடுத்து களமிறங்கிய குஷால் மெண்டிஸ் உடன் ஜோடி சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தார். 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் குசல் மெண்டிஸ் அரைசதம் கடந்து 59 ரன்களில் அவுட்டானார்.

அசத்திய மேத்தியூஸ்:
அந்த நிலைமையில் களமிறங்கிய டி சில்வா 6 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால் உடன் மீண்டும் கைகோர்த்த அஞ்சலோ மெத்தியூஸ் தனது அணியை வலுவான நிலையை நோக்கி நடக்க வைத்தார். 5-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் அரைசதம் கடந்து 66 ரன்கள் எடுத்திருந்தபோது தினேஷ் சண்டிமால் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஏஞ்சலோ மேத்யூஸ் சதத்தை கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் நிரோஷன் டிக்வெல்லா 3, மெண்டிஸ் 1, எம்புல்தேனியா 0 ஆகிய டெய் எண்டர்கள் அவருக்கு கை கொடுக்காமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார்கள்.

Angelo Mathews 199.jpeg

199இல் அவுட்:
இருப்பினும் 10-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய விஷ்வா பெர்னாண்டோ 17* ரன்கள் எடுத்து கை கொடுத்ததை பயன்படுத்திய அஞ்சலோ மேத்தியூஸ் 150 ரன்களை கடந்து 19 பவுண்டரி 1 சிக்சருடன் இரட்டை சதத்தை நெருங்கி 199 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக அவர் அவுட்டானதும் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் சார்பில் நயிம் ஹசன் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஆனால் இப்போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இரட்டை சதத்தை வெறும் 1 ரன்னில் தவறவிட்டு ஏஞ்சலோ மேத்திவ்ஸ் அவுட்டானது இலங்கை உட்பட அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. பொதுவாகவே இதுபோன்ற சதங்களையும் இரட்டை சதங்களையும் நெருங்கும் போது அதுவும் 99, 199 போன்ற ரன்களை எடுத்து விட்டால் சச்சின் டெண்டுல்கர் உட்பட எவ்வளவு பெரிய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இயற்கையாகவே ஏற்படும் பதற்றத்தால் அவுட்டாகி சில தருணங்களில் விடுவார்கள். அந்த வகையில் அவுட்டான மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ரன்களில் அவுட்டான 12-வது பேட்ஸ்மேன் என்ற பரிதாப பெருமையைப் பெற்றார்.

அந்த பட்டியல் இதோ:
1. முடஸ்ஸர் நாசர், பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிராக, 1984
2. முகமது அசாருதீன், இந்தியா – இலங்கைக்கு எதிராக, 1986
3. மேத்தியூ எலியட், ஆஸ்திரேலியா – இங்கிலாந்துக்கு எதிராக, 1997
4. சனத் ஜெயசூர்யா, இலங்கை – இந்தியாவுக்கு எதிராக, 1997
5. ஸ்டீவ் வாக், ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 1999
6. யூனிஸ் கான், பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிராக, 2006
7. இயன் பெல், இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2008
8. ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2015
9. கேஎல் ராகுல், இந்தியா – இங்கிலாந்துக்கு எதிராக, 2016
10. டீன் எல்கர், தென் ஆப்பிரிக்கா – வங்கதேசத்துக்கு எதிராக, 2017
11. பாப் டு பிளேஸிஸ், தென்னாப்பிரிக்கா – இலங்கைக்கு எதிராக, 2020
12. அஞ்சேலோ மேத்தியூஸ், இலங்கை – வங்கதேசத்துக்கு எதிராக, 2022*

பரிதாப சாதனை:
மேலும் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 99 ரன்களிலும் 199 ரன்களிலும் அவுட்டான முதல் பேட்ஸ்மேன் என்ற பரிதாபமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் சங்கக்காரா போன்ற பேட்ஸ்மென்கள் ஒன்று 99இல் அவுட்டாகி உள்ளனர்.

அல்லது 199இல் அவுட்டாகி உள்ளனர். ஆனால் ஏஞ்சலோ மேத்யூஸ் தான் வரலாற்றிலேயே முதல் முறையாக 99 ரன்கள் மற்றும் 199 ரன்கள் ஆகிய 2 தருணங்களிலும் அவுட்டான முதல் பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவர் கடந்த 2009இல் மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது 99 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement