DCvsKKR : எவ்ளோ ஸ்ட்ராங் டீம் கொல்கத்தா! ஆனா இப்படி மோசமா தோக்க என்ன காரணம்? – விவரம் இதோ

Kuldeep Yadhav vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற 41-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் 3 (7) ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 (12) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த தமிழக வீரர் பாபா இந்திரஜித் தனது அறிமுக போட்டியில் 6 (8) ரன்களில் அவுட்டாகி தமிழக ரசிகர்களை ஏமாற்றினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த சுனில் நரேன் கோல்டன் டக் அவுட்டாகி மீண்டும் கொல்கத்தாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 35/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய நித்திஸ் ராணாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சரிவிலிருந்து மீட்டெடுக்க போராடினார்.

குல்தீப் ஜாலம்:
5-வது விக்கெட்டுக்கு 48 பொறுப்பான பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்து இந்த ஜோடியில் 4 பவுண்டரி உட்பட 47 (37) ரன்கள் எடுத்திருந்த சிரேயாஸ் ஐயரை அவுட் செய்த குல்தீப் யாதவ் அடுத்து வந்த காட்டடி வீரர் ஆண்ட்ரே ரசலை 0 (3) டக் அவுட் செய்து மிரட்டினார். அதனால் 83/6 என மீண்டும் திண்டாடிய கொல்கத்தாவை மறுபுறம் தாங்கிப் பிடித்த நிதி ராணா 3 பவுண்டரி 4 சிக்சர்கள் அரைசதம் கடந்து 57 (34) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரின்கு சிங் அதிரடியாக 3 பவுண்டரி உட்பட 23 (16) ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் கொல்கத்தா போராடி 146/9 ரன்கள் சேர்த்தது.

 

- Advertisement -

டெல்லி சார்பில் அதிகபட்சமாக சுழலல் ஜாலம் நிகழ்த்திய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 147 என்ற சுலப இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் பந்திலேயே இளம் வீரர் பிரதிவி ஷா அதை வீசிய உமேஷ் யாதவிடமே கேட்டு கொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் 13 (7) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 17/2 என சரிந்த அந்த அணியை மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 8 பவுண்டரி உட்பட 42 (26) ரன்கள் எடுத்து ஓரளவு மீட்டெடுத்து ஆட்டமிழந்தார்.

சொதப்பிய கொல்கத்தா:
அடுத்த ஓவரிலேயே தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய லலித் யாதவ் 22 (29) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 2 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (17) ரன்கள் எடுத்து அதிரடி காட்டினாலும் முக்கிய நேரத்தில் ரன் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் நின்று கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவல் அசால்டாக 3 சிக்சர்களையும் 1 பவுண்டரியும் பறக்க விட்டு 33* (16) ரன்களுடன் இந்த வருடம் முதல் முறையாக டெல்லிக்கு சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதனால் 19 ஓவர்களிலேயே 150/6 ரன்களை எடுத்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறி நிம்மதி அடைந்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்கள் எடுத்து போராடினாலும் இதர பவுலர்கள் கை கொடுக்க தவறியதால் மீண்டும் ஒரு தோல்வியை கொல்கத்தா பதிவு செய்துள்ளது.

என்ன காரணம்:
இந்த வருடம் ஐபிஎல் தொடரை அடுத்தடுத்த வெற்றிகளுடன் தொடங்கிய கொல்கத்தா அதன்பின் 5 போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் பலமான அணியாக கருதப்படும் கொல்கத்தா ஆரம்பத்தில் பெற்ற 3 தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பின் தேவையில்லாமல் பேட்டிங் வரிசையில் மாற்றங்களை செய்து பார்த்ததால் இந்த தோல்வி ஏற்பட்டது என்றே கூற வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் இடம் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் செல்டன் ஜேக்ஸனை கழற்றி விட்டு இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ்க்கு வாய்ப்பு கொடுத்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

SRH vs KKR

அதைவிட வெங்கடேஷ் ஐயர் – சுனில் நரேன், சுனில் நரேன் – சாம் பில்லிங்ஸ், சுனில் நரேன் – ஆரோன் பின்ச், ஆரோன் பின்ச் – வெங்கடேஷ் ஐயர் என ஒவ்வொரு போட்டியிலும் இஷ்டத்திற்கு ஓப்பனிங் ஜோடியை பிரித்து மாற்றி பட்டி டிங்கரிங் பார்க்க அந்த அணி நிர்வாகத்திற்கு இறுதியில் தொடர் தோல்விகள் தான் பரிசாக கிடைத்துள்ளது. மேலும் ஒருசில போட்டிகளில் சொதப்பியதன் காரணமாக பட் கமின்ஸ் போன்ற தரமான நட்சத்திர வீரரையும் பெஞ்சில் அமர வைத்துள்ள அந்த அணியில் தற்போதைக்கு கேப்டனை தவிர எந்த ஒரு வீரருக்கும் நிலையான இடம் இல்லை என்ற காரணமும் அந்த அணி வீரர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி தோல்விக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

 

Advertisement