ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் தேவ்தூத் படிக்கல் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இணைந்து ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்களை குவித்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து அபார தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஒருபுறம் பட்லர் அதிரடி காட்ட மறுபுறம் அவருக்கு கம்பெனி கொடுத்த படிக்கல் 24 (18) ரன்களில் அவுட்டானார். அதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு சிறிது நேரம் பேட்டிங் செய்தாலும் சரவெடியாக வெறும் 19 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 38 ரன்கள் எடுத்து 2-வது விக்கெட்டுக்கு பட்லருடன் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டானார்.
பட்லர் மிரட்டல்:
மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அவுட்டாகாமல் அடம்பிடித்த ஜோஸ் பட்லர் கொல்கத்தா பவுலர்களை நேரம் செல்ல செல்ல பிரித்து மேய்ந்து ரன்களை குவித்தார். மொத்தம் 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட அபார சதமடித்து 103 ரன்கள் அடித்த பின்பு ஆட்டமிழந்தார். கடைசியில் சிம்ரோன் ஹெட்மையர் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 26* (13) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 217/5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் இந்த வருட ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து 218 என்ற கடினமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு முதல் பந்திலேயே எதிர்பாராத வண்ணம் சுனில் நரேன் ரன் அவுட்டானார். ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடி சரவெடியாக ரன்களை குவித்தார். இந்த இருவருமே பட்டைய கிளப்பும் பேட்டிங் வெளிப்படுத்தியதால் அடுத்த 9 ஓவர்களில் 107 ரன்களை எடுத்த கொல்கத்தா வெற்றியை நோக்கி பயணித்த வேளையில் 28 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 58 ரன்கள் எடுத்து ஃபின்ச் அவுட்டானார்.
மிரட்டிய ஷ்ரேயஸ், கலக்கிய சஹால்:
அந்த வலுவான நிலையில் களமிறங்கிய நிதிஷ் ராணா 18 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக 51 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 85 ரன்களுடன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் போராடியதால் கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில் கொல்கத்தா போராடி வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அப்போது 17-வது ஓவரை வீசிய ராஜஸ்தானின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூஸ்வென்ற சஹால் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை 6 (7) ரன்களில் அவுட் செய்து 4-வது பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்து போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார். அதோடு நிற்காத அவர் 5-வது பந்தில் ஷிவம் மாவி, 6-வது பந்தில் பட் கமின்ஸ் என அடுத்து களமிறங்கிய வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்து இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலராக மாபெரும் சாதனை படைத்தார்.
உறைய வைத்த மேட்ச்:
அதோடு ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய உமேஷ் யாதவ் வெறும் 9 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 21 ரன்கள் விளாசி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பான நேரத்தில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய ஓபேத் மெக்காய் செல்டன் ஜாக்சன், உமேஷ் யாதவ் ஆகியோரை அவுட் செய்ததால் 19.4 ஓவர்களில் 210 ரன்களை மட்டுமே எடுத்த கொல்கத்தா போராடி தோல்வி அடைந்தது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்தலாக செயல்பட்ட ராஜஸ்தான் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த த்ரில் வெற்றியால் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் கொல்கத்தா 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த வெற்றிக்கு ராஜஸ்தான் சார்பில் பட்லர் சதமடித்தாலும் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மொத்தத்தில் இப்போட்டியில் முதல் ஓவரிலிருந்தே போட்டி முடியும் வரை பல பரபரப்பான தருணங்கள் நிகழ்ந்ததால் ரசிகர்கள் உறைந்து போனார்கள். அதிலும் நேற்று தனது 15-வது பிறந்தநாளை கொண்டாடிய ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே போட்டியில் ஒரு சதம், ஹாட்ரிக் விக்கெட்கள், 5 விக்கெட் ஹால் போன்ற 3 தருணங்களும் ஒன்றாக சேர்ந்தார் போல் நிகழ்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.



