கொல்கத்தாவை காப்பாற்றிய குலசாமி! ரசிகர்களை வாய் பிளக்க வைத்து மும்பையை கதறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 3 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் அதிரடியாக 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவருடன் மற்றொரு பக்கம் தடுமாற்றத்துடன் விளையாடிய இஷான் கிசான் 14 (21) ரன்களில் ஆட்டமிழந்ததால் 11 ஓவரில் 55/3 என மோசமான தொடக்கத்தை மும்பை பெற்றது. அந்த நேரத்தில் காயத்திலிருந்து குணமடைந்தது மீண்டும் வந்த சூர்யகுமார் யாதவ் மும்பையை காப்பாற்ற போராடினார்.

- Advertisement -

கலக்கிய சூரியகுமார்:
அவருக்கு துணையாக இளம் இந்திய வீரர் திலக் வர்மா தனது பங்கிற்கு அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். 4-வது விக்கெட்டுக்கு 83 ரன்களை அதிரடியாக குவித்து மும்பையை காப்பாற்றிய இந்த ஜோடியில் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்திருந்தபோது சூரியகுமார் அவுட்டானார். அதைத்தொடர்ந்து 19-வது ஓவரில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் அந்த ஓவரை வீசிய ஆஸ்திரேலியாவின் பட் கமின்சை பிரித்தெடுத்து வெறும் 5 பந்துகளை 3 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 22* ரன்களை விளாசி மாஸ் பினிஷிங் கொடுத்தார்.

அவருடன் திலக் வர்மா 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 27 பந்துகளில் 38* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் மிரட்டிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

திண்டாடிய கொல்கத்தா:
அதை தொடர்ந்து 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 7 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 10 (5) ரன்களில் நடையை கட்டினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 17 (12) ரன்களிலும் நிதிஷ் ராணா 8 (7) ரன்களிலும் அவுட்டாகி கொல்கத்தாவுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

அதனால் 83/4 என மிடில் ஓவரில் தடுமாறிய கொல்கத்தாவை அதிரடி வீரரான ரசல் காப்பாற்றுவார் என அனைவரும் நம்பிய நிலையில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய அவர் 5 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் மீண்டும் 101/5 என தடுமாறிய கொல்கத்தா தோல்வியின் பிடியில் வலுவாக சிக்கினாலும் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து நங்கூரமாக களத்தில் நின்று நம்பிக்கை அளித்து கொண்டிருந்தார்.

- Advertisement -

காப்பாற்றிய குலசாமி கமின்ஸ்:
அப்போது கடைசி 42 பந்துகளில் வெற்றி பெறுவதற்கு 61 ரன்கள் தேவை என்ற கொல்கத்தாவுக்கான இலக்கு எளிதாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் வெங்கடேஷ் ஐயர் தனி ஒருவனாக போராடினாலும் மும்பை வெற்றி பெறும் என அனைவரும் உறுதியாக நம்பினர். அப்போதுதான் கொல்கத்தாவை காப்பாற்றும் குலசாமியாக வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் விஸ்வரூபம் எடுத்து மும்பையை பந்தாடினார்.

அந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் தான் வெளுத்து வாங்குவார் என எதிர்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொடுத்த அவர் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டு திடீரென போட்டியை அப்படியே கொல்கதாவின் பக்கம் திருப்பினார். அதிலும் 16-வது ஓவரின்போது 35 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் வீச அதில் ருத்ர தாண்டவம் ஆடிய அவர் 6, 4, 6, 6, 3(நோ பால்), 4, 6 என 35 ரன்களை தெறிக்க விட்டதால் வெறும் 16 ஓவர்களிலேயே 162/5 ரன்கள் எடுத்த கொல்கத்தா 4 ஓவர்கள் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இப்படி திடீரென களமிறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் மும்பையை பந்தாடிய கமின்ஸ் வெறும் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட கடைசி வரை அவுட்டாகாமல் அரைசதம் கடந்து 56* ரன்கள் குவித்து கொல்கத்தாவை தனி ஒருவனை போல வெற்றி பெற செய்த காரணத்தால் எந்தவித ஆச்சரியமுமின்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அவருக்கு உறுதுணையாக நின்ற வெங்கடேச ஐயர் 41 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 50* ரன்கள் விளாசினார். இந்த அதிரடியான வெற்றியால் இந்த வருடம் பங்கேற்ற 4 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியது.

இதையும் படிங்க : உண்மையாவே அவர் யார்கர் கிங் தான்! நடராஜனை பார்த்து ஆச்சர்யப்படும் இங்கிலாந்து இளம் வீரர்

இந்த போட்டியில் விஸ்வரூபம் எடுத்து கமின்ஸை பார்த்த ரசிகர்கள் அப்படியே வியந்து போய் வாய்மேல் கையை வைத்து அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள். அதிலும் இப்படிப்பட்ட பிரம்மாண்ட வெற்றியைப் பார்த்த கொல்கத்தா அணியின் உரிமையாளர் மற்றும் பிரபல நடிகர் ஷாருக்கான் பட் கமின்ஸ் உடன் நடனம் செய்ய விரும்புவதாக டுவிட்டரில் வெறித்தனமாக பாராட்டியுள்ளார்.

Advertisement