ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்பு நடப்புச் சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 210/7 ரன்களைக் குவித்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி வெறும் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
லக்னோ மாஸ் வெற்றி:
அதை தொடர்ந்து 211 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் ராகுல் ஆகியோர் இணைந்து 99 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சென்னையின் வெற்றியை ஆரம்பத்திலேயே காலி செய்த இந்த ஜோடியில் கேப்டன் ராகுல் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் 45 பந்துகளில் 61 ரன்களில் அவுட்டானார். அந்த நேரத்தில் களமிறங்கிய மனிஷ் பாண்டே 5 ரன்களிலும் தீபக் ஹூடாவை 13 ரன்களிலும் அவுட் செய்த சென்னை வெற்றிக்காக போராடியது.
அந்த நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ் படோனியுடன் ஜோடி சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் கடைசி நேரத்தில் சென்னைக்கு கருணையே காட்டாமல் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட போது 19-வது ஓவரை வீசிய ஷிவம் துபேவை கதறவிட்ட இந்த ஜோடி 25 ரன்களை குவித்து போட்டியை தலைகீழாக மாற்றி லக்னோவின் வெற்றியை உறுதி செய்தது.
இறுதியில் 19.3 ஓவரில் 211/4 ரன்களை எடுத்த லக்னோ வரலாற்றில் தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து வெற்றி பாதைக்கு திரும்பியது. மறுபுறம் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினாலும் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்ட சென்னை இந்த வருடத்தில் தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்து மண்ணைக் கவ்வியது. இந்த வெற்றிக்கு வெறும் 23 பந்துகளில் 55* ரன்கள் விளாசி வித்திட்ட எவின் லீவிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மண்டையை உடைத்த ஆயுஷ் படோனி:
அவருடன் பேட்டிங் பேட்டிங் செய்த இளம் இந்திய வீரர் ஆயுஷ் படோனி வெறும் 9 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 19* ரன்களை குவித்து லக்னோ அணிக்கு பினிஷராக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் சிவம் துபே வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அவர் யாருமே எதிர்பாராத வண்ணம் வலதுபுறம் வந்து முட்டி போட்டு அசால்டாக சிக்ஸர் அடித்தார்.
அவர் அடித்த அந்த பந்து மைதானத்தில் இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் ரசிகையின் மண்டையை பதம் பார்த்தது. நல்ல வேலையாக அந்தப் பெண் ரசிகைக்கு ரத்தம் வரும் அளவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாக களமிறங்கிய அவர் அந்த முதல் போட்டியிலேயே 29/4 என தனது அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது அபாரமாக பேட்டிங் செய்து 41 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 54 ரன்கள் விளாசினார்.
இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 6-வது இடத்தில் களமிறங்கி அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார். மேலும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ் போல இதுவரை அவர் விளையாடிய 2 போட்டிகளிலும் அதிரடியாக மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு வருகிறார்.
இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன்:
இப்படி மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என பெயர் பெற்ற டிவில்லியர்ஸ் போல விளையாட துவங்கியுள்ள இவரை குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியின்போதே எங்கள் அணியின் “பேபி ஏபி” என அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டியிருந்தார். அந்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் அபார பினிஷிங் கொடுத்த அவரை மீண்டும் கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.
“படோனி விளையாடிய ஒரு சில வீடியோக்களை பார்த்துள்ளேன். அவரின் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. 360 டிகிரியிலும் அதிரடியாக அடிக்கக் கூடிய வலுவான பேட்ஸ்மேனாக அவர் திகழ்கிறார். அவர் வருங்கால வெள்ளைப்பந்து இந்திய அணிக்கு ஒரு நல்ல கண்டுபிடிப்பு” என பாராட்டினார்.
இதையும் படிங்க : எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க – பாசத்தில் பொங்கிய சின்னத்தல ரெய்னா, கலங்கிய ரசிகர்கள் (வீடியோ இதோ)
மேலும் சமீப காலங்களாக டெல்லி அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வந்த இவரை லக்னோ அணியில் விளையாட வைத்த பெருமை கௌதம் கம்பீர் மற்றும் விஜய் தகியா ஆகியோரை சேரும் என கேஎல் ராகுல் தெரிவித்தார். மொத்தத்தில் 22 வயதிலேயே மைதானத்தின் நாலா புறங்களிலும் ரன்களை அடிக்கக் கூடிய ஒரு நல்ல இந்திய வீரர் கிடைத்துள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



