கடந்த வருடமே இந்த முடிவை தோனி எடுத்துட்டாரு. அதை எங்க கிட்டயும் சொன்னாரு – காசி விஸ்வநாதன் தகவல்

kasi
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. வரும் மே 29-ம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த தொடர் 65 நாட்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Dhoni-1
Dhoni Captain

முன்னதாக இந்த தொடர் துவங்குவதற்கு வெறும் ஒருநாள் மட்டுமே மீதியிருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த நட்சத்திரம் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடங்கப்பட்டபோது சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் கடந்த வருடம் வரை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் அந்த அணியை குறைந்தது பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

வெற்றிகரமான கேப்டன்:
2008 – 2021 வரை தொடர்ந்து சென்னை அணியை வழிநடத்தி வந்த அவர் 12 சீசன்களில் அந்த அணிக்கு கேப்டன்ஷிப் செய்து 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். அதில் 9 முறை இறுதிப்போட்டியில் விளையாட வைத்த அவர் 4 சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சென்னையை ஜொலிக்க வைத்துள்ளார். மேலும் கோப்பைகளின் அடிப்படையில் ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமாகன விடை பெற்றுள்ள அவர் சென்னை அணிக்காக 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

Dhoni-3

மொத்தம் 204 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் அதில் 121 வெற்றிகளை 59.60% என்ற சராசரி விகிதத்தில் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக 5 கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மாவை காட்டிலும் போட்டிகள் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக எம்எஸ் தோனி சாதனை படைத்துள்ளார். இவ்வளவு பெருமைக்குரிய அவர் தற்போது 40 வயதை கடந்து விட்டதால் சென்னை அணியின் மீது இருக்கும் அக்கறை காரணமாக காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை மற்றொரு நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

- Advertisement -

ஒரு வருடத்துக்கு முன்பே எடுத்த முடிவு:
இதை அடுத்து ஜடேஜா தலைமையில் ஒரு சாதாரண வீரராக விளையாட இருக்கும் எம்எஸ் தோனி அவருக்கு உதவி செய்வார் என தெரிய வருகிறது. கடந்த வருடம் கோப்பையை வென்ற காரணத்தால் தற்போது நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் சென்னை அணிக்கு இந்த வருடமும் கேப்டன்ஷிப் செய்து கடைசிவரை ஒரு கேப்டனாகவே ஐபிஎல் தொடரிலிருந்து அவர் ஓய்வு பெறுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பொதுவாகவே வித்தியாசமான முடிவை எடுக்கும் அவர் சென்னை அணியின் மீது இருக்கும் அக்கறை காரணமாக தனக்கு உள்ள கௌரவத்தையும் தூக்கி வைத்து விட்டு ஜடேஜா போன்ற ஒரு அனுபவமில்லாத கேப்டன் தலைமையில் சாதாரண வீரராக விளையாடும் முடிவு எடுத்துள்ளது பல ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது.

Kasi

சொல்லப்போனால் இந்த முடிவை கடந்த வருடம் துபாயில் நடந்த ஐபிஎல் 2021  இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை தோற்கடித்து கோப்பையை வென்ற நாளன்றே எம்எஸ் தோனி எடுத்து விட்டார் என்ற பின்னணி இப்போது வெளியாகியுள்ளது. இதுபற்றி சென்னை அணி நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் பேசியது பின்வருமாறு. “சில தினங்களுக்கு முன்பு நடந்த பயிற்சியின் முடிவில் நான் ஜடேஜாவிடம் பேசினேன். அப்போது கடந்த வருடம் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற பின் அடுத்த வருடம் சென்னையை பொறுப்புடன் வழிநடத்த வேண்டிய பொறுப்பை நீ ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எம்எஸ் தோனி கூறியதாக ஜடேஜா என்னிடம் தெரிவித்தார். மேலும் அடுத்த வருடம் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டிய நிலைமை கூட வரும் என தோனி கூறியதாக ஜடேஜா கூறினார். தற்போது அது போலவே ஜடேஜா தலைமையில் விளையாட இருக்கும் அவர் அவருக்கு தேவையான விஷயங்களில் உதவியாக செயல்பட உள்ளார். இது ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என கூறினார்.

காலத்திற்கும் விளையாட முடியாது:
கடந்த பல வருடங்களாக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து சென்னை அணியின் ரத்தமும் சதையுமாக கலந்த அவரை சென்னை மற்றும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் “தல” என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும் ஏற்கனவே வயது காரணமாக கடந்த சில வருடங்களாக ரன்கள் அடிக்க முடியாததை உணர்ந்த எம்எஸ் தோனி காலத்திற்கும் விளையாட முடியாது என்பதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை கடந்த வருடமே எடுத்து விட்டதாக தெரிகிறது. அதற்கு ரவீந்திர ஜடேஜா தகுதியானவராக இருப்பார் என உணர்ந்த தோனி சென்னை மீது உள்ள அக்கறை காரணமாக கடைசிவரை கேப்டனாக விளையாடாமல் அவருக்கு கீழ் விளையாடி அவரை ஓரளவு நல்ல கேப்டனாக வளர்த்த பின் ஓய்வு பெறலாம் என்பதற்காகவே இந்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக விலகியுள்ளார் என்று தெரிய வருகிறது.

Dhoni

இது பற்றி காசிவிசுவநாதன் மேலும் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியிடம் இருந்து இது போன்ற ஒரு செய்தி வரும் என நான் எதிர் பார்க்கவில்லை. இருப்பினும் அவரின் எந்த முடிவாக இருந்தாலும் அது சென்னை அணியின் நலனுக்காக இருக்கும். ஏனெனில் அவர் சென்னை அணியின் ஒரு மகத்தான விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன் போன்ற ஆல்-ரவுண்டர். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது சென்னை அணியின் நல்லதுக்காகவே இருக்கும். அவரின் இந்த முடிவு ஒரு சிலருக்கு வருத்தமாக இருந்தாலும் சென்னை அணிக்கு இனிப்பான ஒன்றாகும். அவர் எங்கும் செல்ல மாட்டார் எப்போதும் சென்னை அணியுடன் இருந்து ஜடேஜா மற்றும் இதர வீரர்களை வழி நடத்துவார்” என கூறினார்.

Advertisement