புதிய கேப்டனான ஜடேஜா தனித்துவமான புதிய சாதனை! – சென்னையை வழிநடத்த தகுதியானவரா?

Jadeja
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் 2022 தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. வரும் மே 29-ஆம் தேதியன்று மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும் இந்த தொடரில் 10 அணிகள் 74 போட்டிகளில் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிக்குப்பின் தயாராக உள்ளன

Dhoni

- Advertisement -

முன்னதாக இந்த தொடர் தொடங்குவதற்கு வெறும் ஒருநாள் முன்பாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திரம் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் கேப்டனாக சென்னையை ஒவ்வொரு வருடமும் அபாரமாக வழிநடத்தி வந்த அவர் 4 கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக விடை பெற்றுள்ளார்.

புதிய கேப்டன் ஜடேஜா:
கடந்த பல வருடங்களாக சென்னைக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் தற்போது 40 வயதை கடந்து விட்டதன் காரணமாக சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தனது கேப்டன் பொறுப்பை மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து இந்த வருடம் அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாட இருக்கும் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. அவரை போன்ற ஒரு ஜாம்பவான் கேப்டனாக இல்லாதது கண்டிப்பாக சென்னை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Jadeja

தனித்துவமான சாதனை:
கடந்த 2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட துவங்கி அதன்பின் 2011-ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக விளையாடிய ஜடேஜா பின்னர் 2012 முதல் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடினார். மேலும் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை தடை பெற்றபோது குஜராத்தின் அணியில் விளையாடிய அவர் இதுவரை மொத்தம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இன்று சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதன் வாயிலாக “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு கேப்டனாகும் முன்பாக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்” என்ற தனித்துவமான சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் ராபின் உத்தப்பா 193 போட்டிகளுடனும், ஏபி டிவிலியர்ஸ் 184 போட்டிகளுடனும், அம்பத்தி ராயுடு 175 போட்டிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

- Advertisement -

புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜாவுக்கு இதற்கு முன் கேப்டன்ஷிப் அனுபவம் சுத்தமாக கிடையாது. இதற்கு முன் கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் கிரிக்கெட்டில் தனது மாநில அண்டர்-19 அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அவர் இப்போது தான் முதல் முறையாக ஒரு முதல்தர கிரிக்கெட்டில் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். அப்படிப்பட்ட நிலையில் சென்னை அணிக்கு அவர் கேப்டன்ஷிப் செய்ய தகுதியானவரா, இதுவரை அவர் செய்துள்ள சாதனைகள் பற்றிய புள்ளி விவரங்களை பார்ப்போம்.

jadeja 2

1. இதுவரை பங்கேற்ற 200 போட்டிகளில் 2386 ரன்களையும் 127 விக்கெட்டுகளையும் எடுத்துள்ள ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகள் எடுத்த ஒரே ஆல்-ரவுண்டராக அபார சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. மேலும் 127 விக்கெட்டுக்களுடன் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 11-ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையும் சென்னை அணிக்காக 100+ விக்கெட்டுகளை எடுத்த 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

jadeja 1

3. அத்துடன் 81 கேட்ச்களை பிடித்துள்ள இவர் மைதானத்தின் எந்த ஒரு இடத்திலும் இருந்தாலும் துல்லியமாக ஸ்டம்ப்பை பதம் பார்க்கும் மின்னல்வேக பீல்டராக எதிரணிகளை மிரட்டும் திறமை படைத்தவர்.

- Advertisement -

4. சென்னை அணிக்கு காலம் காலமாக பினிஷெராக செயல்பட்டு வந்த நட்சத்திரம் எம்எஸ் தோனி கடந்த சில வருடங்களாக ரன்கள் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வருகிறார். அந்த வேளையில் கடந்த சில வருடங்களாக அவரின் இடத்தில் கடைசி நேரத்தில் களமிறங்கும் ஜடேஜா அதிரடியாக ரன்களை குவித்து மிகச் சிறப்பான வெற்றிகளை தேடித் தந்து சென்னை அணியின் புதிய பினிசெராக உருவெடுத்துள்ளார்.

5. கடந்த 2021-ஆம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரு போன்ற அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் தனி ஒருவனாக விளையாடி அபார பினிஷிங் செய்த அவர் அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். குறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் ஊதா தொப்பியை வென்ற பவுலர் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 37 ரன்களை பறக்கவிட்ட ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார்.

மொத்தத்தில் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ள ரவிந்திர ஜடேஜா கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வழி நடத்த தகுதி பெற்றுள்ளார் என கூறலாம். அவருக்கு உதவியாக எம்எஸ் தோனி இருப்பதால் நிச்சயமாக சென்னை அணி கோப்பையை தக்க வைக்கும் என அந்த அணி ரசிகர்கள் நம்பலாம்.

Advertisement