ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ம் தேதியன்று இந்தியாவின் மும்பை நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லக்னோ மற்றும் குஜராத் போன்ற புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. மேலும் இத்தொடரை காண 25% ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட் – எம்எஸ் தோனி:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மிகவும் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கோப்பையை தக்க வைப்பதற்காக கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஸ்பெஷல் பயிற்சியை மேற்கொண்டு முதல் போட்டி நடைபெறும் மும்பை நகரை சேர்ந்தடைந்துள்ளது.
இந்த தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் மயங்க் அகர்வால், ஹர்டிக் பாண்டியா போன்ற இளம் வீரர்கள் அந்தந்த அணிகளுக்கு கேப்டன்ஷிப் செய்யவுள்ளனர். இருப்பினும் இந்த தொடரில் மிக இளம் வயதில் கேப்டனாக செயல்படும் வீரராக டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இளம் வீரர் ரிஷப் பண்ட் வழி நடத்த உள்ளார். அதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் அதிக வயதில் கேப்டன்ஷிப் செய்யும் வீரராக 40 வயதை கடந்துள்ள ஜாம்பவான் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்துகிறார்.

ஒப்பீடு சரியா:
இதில் அனுபவ வீரர் எம்எஸ் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என நிரூபித்தவர். மறுபுறம் வளர்ந்து வரும் வீரராகக் கருதப்படும் ரிஷப் பண்ட் சில சமயங்களில் தோனி படைத்த சாதனைகளை அசால்டாக முறியடித்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். இதனால் சமீப காலங்களாக விக்கெட் கீப்பர்களாக இருக்கும் இவர்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாக மாறி விட்டது.
அப்படிப்பட்ட நிலையில் இதே கேள்வியை தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனிடம் எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு. “சமீப காலங்களில் பொதுவாகவே ஒப்பிடக்கூடிய ஒருசில அம்சங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் வித்தியாசமானவர்கள் என்பதுடன் அவர்களிடம் வித்தியாசமான திறமைகள் இருக்கும்.

இந்த உலகம் எம்எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை ஒப்பிட முயற்சிக்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே வித்தியாசமான கிரிக்கெட் வீரர்கள். அவர்களிடம் உயர்ந்த திறமைகள் உள்ளது. அதிலும் நிதானமாகவும் பொறுமையாகவும் வழி நடத்தும் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார். அதே குணத்தை தான் எம்எஸ் தோனியிடமும் நான் பார்த்தேன். உண்மையாக சொல்ல வேண்டுமெனில் தனித்திறமைகள் நிறைந்துள்ள ரிஷப் பண்ட் தனது அணியை முன்னின்று வழி நடத்தும் தகுதியை பெற்றுள்ளார்” என கூறினார்.
தனித்தனி திறமைகள்:
“இந்த இளம் வயதிலேயே ரிஷப் பண்ட் படைத்துள்ள சாதனைகளும் செயல்பாடுகளும் அபாரமானது. அவர் வரும் காலங்களில் தனது அனுபவங்களிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு முன்னேற்றம் அடைவார். மேலும் ஒருவரின் தலைமையில் கீழ் நான் விளையாடியதில் ரிக்கி பாண்டிங் ஒரு மகத்தான கேப்டன். இம்முறை அவரிடம் பண்ட் பயிற்சி பெறுவது நல்ல விஷயமாகும். மேலும் எம்எஸ் தோனியுடன் ஒப்பிடும் அளவுக்கு ரிஷப் பண்ட் தனித்துவமாக சிறப்பாக செயல்படுவார். தோனி மற்றும் பண்ட் ஆகிய இருவருமே அவர்களுக்கு உரித்தான பாணியில் விளையாடுகிறார்கள். அந்த வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்” என இது பற்றி ஷேன் வாட்சன் மேலும் தெரிவித்தார்.

அதாவது இருவரும் வெவ்வேறு திறமைகள் கொண்ட வித்தியாசமான வீரர்கள் என குறிப்பிட்டுள்ள ஷேன் வாட்சன் இருவருக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்பது தேவையற்றது எனக் கூறினார். இதில் இளம் வயதிலேயே பல சாதனைகள் படைத்து வரும் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் தோனி அளவுக்கு வரும் காலங்களில் வருவார் என அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வாட்சன் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா கண்ட மகத்தான கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இம்முறை கேப்டனாக செயல்படும் ரிஷப் பண்ட் இன்னும் முன்னேற்றம் அடைந்து உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவெடுப்பார் என வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



