கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்காக ஒரு போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வது வழக்கமான ஒன்றாகும். பெரும்பாலான சமயங்களில் வெறும் வாய் வார்த்தையாக இருக்கும் அது சில சமயங்களில் கைகலப்பாக மாறிவிடும். அரிதினும் அரிதாக ஒரு சில நேரங்களில் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுடன் ஒரு சில வீரர்கள் சண்டையில் ஈடுபட்ட வரலாறும் உள்ளது. ஆனால் ஒரு சில நேரங்களில் யாருமே எதிர்பாரா வண்ணம் ஒரே நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் சண்டை போட்டுக்கொள்வதும் உண்டு.

கம்பிர் – விராட் கோலி சண்டை:
அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சண்டை போட்டுக்கொண்டது இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாததாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கௌதம் கம்பீர் கேப்டனாக செயல்பட்ட நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக முதல்முறையாக விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்.
பெங்களூருவில் 13-வது லீக் போட்டியாக நடந்த அந்த போட்டியில் தமிழக வீரர் லஷ்மிபதி பாலாஜி வீசிய பந்தியில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது பவுண்டரி அடிக்க முயன்ற விராட் கோலி இயன் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அப்போது அதை உற்சாகமாக கொண்டாடிய கொல்கத்தா வீரர்களால் கோபமடைந்த விராட் கோலி ஒரு சில வார்த்தைகளை பிரயோகம் செய்தார்.

அதனால் கோபமான கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் இதர வீரர்கள் இடையில் புகுந்து தடுத்ததால் அந்த சண்டை வாய் வார்த்தையோடு நின்றது. ஆனால் அதற்கு முன் இந்தியாவிற்காக இணைந்து விளையாடிய 2 இந்திய வீரர்கள் இப்படி களத்தில் சண்டை போட்டுக்கொண்டது பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
பழசை மறந்துவிட்டேன்:
அந்த தருணம் நடந்து சுமார் 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த மோசமான தருணத்தை மறந்து விட்டதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது ஓகே. அந்த தருணத்தை மறந்துவிட்டு தற்போது நன்றாக இருக்கிறேன். அவரும் அப்படி இருப்பார் என எதிர்பார்க்கிறேன். நானும் அப்படித்தான் உள்ளேன். பொதுவாகவே நான் அதுபோன்ற ஆக்ரோஷத்துடன் போடுபவர்களுடன் போட்டியிட விரும்புபவன். எம்எஸ் தோனி தனக்கென்று ஒரு வழியில் போட்டியிடுவார்.
.
விராட் கோலி அவரின் வழியில் போட்டியிடக் கூடியவர். ஒரு சில நேரங்களில் ஒரு அணியை வழிநடத்தும் போது அதை (சண்டை) செய்ய விரும்பாவிட்டாலும் செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் அணி வீரர்கள் உங்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். ஒரு கேப்டனாக ஒரு சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட நபருடன் உள்ள உறவைப் பற்றி சிந்திக்காமல் நமது அணியை ஆக்ரோசமாக அதிரடியாக வழி நடத்துவதை பற்றி சிந்திக்க வேண்டும்” என கூறினார்
அதாவது ஒரே நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒரு அணிக்கு கேப்டனாக இருக்கும் போது அணியின் வெற்றிக்காக அதுபோன்ற சண்டைகள் தவிர்க்க முடியாதது என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதை தற்போது மறந்து விட்டதாக கூறியுள்ள அவர் விராட் கோலியும் தம்மைப் போலவே அந்த சண்டையை மறந்திருப்பார் என நம்புவதாக தெரிவித்தார். எனவே இனிமேல் அவருடன் ஒரு நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அருமையான வீரர் விராட் கோலி:
“அந்த சண்டை என்பது சொந்த விருப்பு வெறுப்புக்காக நடந்தது கிடையாது. குறிப்பாக விராட் கோலிக்கு எதிராக கிடையாது. மேலும் இதை நான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். அவர் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து பல சாதனைகளை படைத்து வருவதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் இருந்த அவர் இன்று நிறைய குணங்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொண்டு மாறியுள்ளார். குறிப்பாக அவர் தனது உடல் தகுதியில் மேம்பாடுகளை செய்தது உண்மையாகவே அபாரமானது” என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர் விராட் கோலியை மனதார பாராட்டினார்.
ஆரம்ப காலங்களில் இருந்த விராட் கோலி தனது உடல் தகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை செய்ததால் இன்று பல சாதனைகளை படைத்து வருகிறார் என கூறியுள்ள கௌதம் கம்பீர் அவர் ஒரு தரமான வீரர் என்பதால் அவரின் சாதனைகள் தமக்கு ஆச்சரியமாக தோன்றவில்லை என தெரிவித்தார். 2013-ஆம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி மலைபோல ரன்களைக் குவித்து முழு மூச்சுடன் போராடிய போதிலும் கேப்டனாக ஒரு கோப்பையை வென்று தர முடியவில்லை.
இதையும் படிங்க : நான் கோவத்துடன் எதிர்த்து பந்துவீசிய பேட்ஸ்மேன் இந்த ஒருவர் தான் – சோயிப் அக்தர் வெளிப்படை
அதன் காரணமாக தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் கடந்த வருடம் பெங்களூர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அந்த சமயங்களில் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்பது போன்ற விமர்சனங்களை கௌதம் கம்பீர் தெரிவித்து வந்தார். அப்படிப்பட்ட நிலையில் இப்போது விராட் கோலியை பற்றி பாராட்டிப் பேசியுள்ள கௌதம் கம்பீர் அவரை நட்பு பாராட்ட அழைப்பதை பார்க்கும் ரசிகர்கள் வியந்து போகிறார்கள்



