இந்திய அணியின் கேப்டனாக மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கேப்டனாக நீடித்து வந்த விராட் கோலி ஐசிசி தொடர்களை கைப்பற்ற முடியாததன் காரணமாக அடுத்தடுத்து டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அண்மையில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் வெளியேறினார். இதன் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்து வெற்றி பெற்ற இந்திய அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மார்ச் மாதம் நான்காம் தேதி துவங்கிய இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இதனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா பெயர் பெற்றுள்ளார். இவ்வேளையில் இன்னும் எத்தனை நாட்கள் ரோகித் சர்மா இந்த கேப்டன் பொறுப்பில் தலைமை தாங்கி விளையாட போகிறார் என்று தெரியவில்லை என இந்திய அணியின் முன்னணி வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் வெளிப்படையான தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ரோகித் சர்மா ஒரு திறமையான கேப்டன் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போன்று அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டியது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அணியின் கேப்டனாக நீங்கள் நீடிக்கும் பட்சத்தில் நிச்சயம் எந்த போட்டியிலும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாக விளையாட வேண்டியது அவசியம்.
அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டு மீதமுள்ள அனைத்து மாதங்களிலும் அவர் தொடர்ச்சியாக நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ரோகித் சர்மா போன்று வீரர்களுக்கு இப்படி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவது அவரது உடல் தகுதிக்கு ஏற்றதா என்று தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் ரோகித் சர்மா இப்படி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் விளையாடுவார் என்பது தெரியவில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
இதையும் படிங்க : எவ்ளோ யோசிச்சி போட்ட பிளான். எல்லாம் வீணா போச்சி – கலங்கி நிற்கும் சி.எஸ்.கே நிர்வாகம் (என்ன ஆச்சு தெரியுமா?)
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மா தற்போது இருக்கும் உடற்தகுதியில் அவர் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒருமுறை அவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர் சில போட்டிகளை தவற விடுவார். இதன் காரணமாக தற்போது தொடர்ந்து அவர் விளையாடுவதால் எவ்வளவு தூரம் அவர் விளையாடுவார் என்பது எனக்கு சந்தேகமான ஒன்றாக உள்ளது. மற்றபடி அவரது கேப்டன்ஷிப் மீது எந்தவித சந்தேகமும் கிடையாது என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.



