இந்திய கிரிக்கெட் அணியானது இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெற்றிகரமாக விளையாடி முடித்த வேளையில் அடுத்ததாக முதன்முறையாக முழுநேர டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்றுள்ள ரோகித் சர்மாவின் தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மார்ச் 4-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டனர். அதோடு ஏற்கனவே துணை கேப்டனாக அணியில் பயணித்து வந்த ரஹானேவின் பதவி பறிக்கப்பட்டது மட்டுமின்றி அவர் அணியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளது வருத்தத்தை அளித்திருந்தாலும் அணியின் முன்னேற்றத்திற்காக சில மாற்றங்களை செய்தாக வேண்டும் என்றும் இந்திய நிர்வாகம் தெளிவான விளக்கத்தையும் கொடுத்திருந்தது.
இந்திய அணி கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்தது. அந்த தோல்விக்கு பிறகு தான் கேப்டன் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறாத ஒரு அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆம், இந்திய அணி ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இல்லாமல் விளையாடப் போகும் முதல் போட்டி இதுதான். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்த ரஹானே மற்றும் புஜாரா இல்லாமல் இந்திய அணி முதல் முறையாக புது மிடில் ஆர்டரோடு களமிறங்க உள்ளது அறிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் அவர்களின் இடத்தில் விளையாடப்போகும் இளம் வீரர்கள் குறித்தான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது .தற்போது இந்திய அணியில் காலியாக உள்ள இந்த 2 இடத்திற்கு சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய மூன்று பேர் போட்டியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் : டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி தவறவிட்ட 3 மாபெரும் வரலாற்று சாதனைகள்
என்ன இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகராக நீங்கள் இருந்தால் நிச்சயம் புஜாரா மற்றும் ரஹானேவின் நீக்கம் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மார்ச் நான்காம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.



