இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரின் முதலாவது போட்டியில் 57 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் அய்யர் இரண்டாவது போட்டியில் 74 ரன்களையும், மூன்றாவது போட்டியில் 73 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார். இந்த தொடர் முழுவதுமே 3 ஆட்டங்களிலும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காத அவர் 204 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதையும் வென்று அசத்தி இருந்தார்.

விராத் கோலி ஓய்வு எடுத்த வேளையில் அவரது இடத்தில் எந்த பேட்ஸ்மென் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் 3-வது வீரராக களமிறங்கி தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அற்புதமான பேட்டிங் ஃபார்மை இந்த தொடரில் வெளிக்காட்டினார். இதன் காரணமாக இனி வரும் இரண்டு தொடர்களிலும் அவருக்கு அணியில் நிச்சயம் இடம் அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் தனது சிறப்பான ஃபார்ம் குறித்து பேசி உள்ள ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : டி20 கிரிக்கெட்டில் டாட் பால் என்பது பேட்ஸ்மேன்கள் செய்யும் மிகப்பெரிய குற்றச் செயல் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

டாட் பால் விளையாடும்போது பேட்ஸ்மேன்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பந்திலும் ரன்களை குவிக்க வேண்டும் என்பது பற்றி மட்டுமே பேட்ஸ்மென்கள் சிந்திக்கவேண்டும். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முதல் பந்தில் இருந்தே ரன்களை குவிக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட துவங்கிவிடுவார்கள். அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் ரன்களை குவிக்கக்கூடிய ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கேப்டன் ரோகித் சர்மா என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பினை வழங்கி ஆதரவாக நடத்தி வருகிறார். அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன்.
இதையும் படிங்க : ஐபிஎல் வரலாறு : கோப்பை வெல்லமுடியாத பஞ்சாப் கிங்ஸ் அணியும் – அதன் ராசியும் – ஒரு முழு அலசல்
எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணிக்காக சிறப்பான பங்கினை அளிப்பேன் என்றும் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதுதான் தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக 12.25 கோடிக்கு ஏலம் போனது மட்டுமின்றி அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.



