தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 19ஆம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நிகழ்ந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. எனவே இந்த ஒருநாள் தொடரில் எப்படியாவது வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா வெற்றிக்காக போராட உள்ளது.

விலகிய விராட் கோலி:
இந்த தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய ஒருநாள் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி நீக்கம் செய்யப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் அவர் முழுக்கு போட்டுள்ளார். இனி இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக விளையாடப்போகும் அவர் கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக கேப்டனாக இல்லாமல் தற்போது கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார்.
சுதந்திர பறவை:
சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி ஏற்கனவே பல ஆயிரம் ரன்களை குவித்து பல சாதனைகளை படைத்தவர். ஆனாலும் கடந்த 2019 க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டின் எந்த ஒரு போட்டியிலும் சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வருகிறார்.

3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டதால் ஏற்பட்ட அதிகப்படியான பணிச்சுமை அவரின் பேட்டிங்கை பாதிக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது கேப்டன் பதவியில் இருந்து மொத்தமாக விலகியுள்ளதால் இனி அவரால் சுதந்திர பறவையாக பேட்டிங் செய்ய முடியும் என நம்பலாம்.
சச்சினை முந்தப்போகும் கோலி:
இந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி ஒரு சில முக்கிய சாதனைகளை படைக்க போகிறார். அதில் முக்கிய சாதனையாக “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்” என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையை முறியடித்து புதிய சாதனையை விராட் கோலி படைக்க உள்ளார்.

இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் நடந்த ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 5065 ரன்கள் (147 போட்டிகள்
2. விராட் கோலி : 5057 ரன்கள்* (107 போட்டிகள்)
3. எம்எஸ் தோனி : 4520 (145 போட்டிகள்)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இன்னும் 9 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சச்சினை முந்தி இந்த புதிய சாதனையை படைப்பார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் (14 சதங்கள்) சாதனையை ஏற்கனவே முந்தி விராட் கோலி (20 சதங்கள்) சாதனை படைத்துள்ளார்.

கங்குலி, டிராவிட் :
இத்துடன் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோரின் முக்கிய சாதனையையும் இந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. அது என்னவெனில் இந்த ஒருநாள் தொடரில் அவர் இன்னும் 27 ரன்களை அடிக்கும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய வீரர்” என்ற சாதனையை சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி படைப்பார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் :
1. சச்சின் டெண்டுல்கர் : 2001 ரன்கள்
2. சௌரவ் கங்குலி : 1313 ரன்கள்
3. ராகுல் டிராவிட் : 1309 ரன்கள்
4. விராட் கோலி : 1287* ரன்கள்
இதையும் படிங்க : INDvsRSA : ஒருநாள் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?
இது மட்டுமல்லாமல் இந்த ஒருநாள் தொடரில் அவர் இன்னும் 171 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த 3வது வெளிநாட்டு வீரராக சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி புதிய சாதனையை படைக்க முடியும். ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் : 1453 ரன்கள்
2. ரிக்கி பாண்டிங் : 1423 ரன்கள்
3. சௌரவ் கங்குலி : 1048 ரன்கள்
4. ராகுல் டிராவிட் : 930 ரன்கள்
5. விராட் கோலி : 887* ரன்கள்.



