இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 25ஆம் தேதி) லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் ஏற்கனவே ஒரு போட்டியை இழந்த நிலையில் நிச்சயம் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் பலமாக திரும்ப நினைக்கும். அதே போன்று இந்திய அணியும் லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றியை தொடர விரும்பும். இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.
அதுமட்டுமின்றி 2வது டெஸ்ட் போட்டியின் போது வீரர்கள் இடையே மோதல், சீண்டல் என போட்டி பரபரப்பாக சென்றதால் இந்த போட்டியில் சுவாரசியம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த 3ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் லீட்ஸ் மைதானத்தில் நிச்சயம் போட்டியின் முடிவுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்பாக இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள 7 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே டிராவாகி உள்ளது. மற்றபடி அனைத்து போட்டிகளிலும் முடிவு கிடைத்துள்ளது.

இதில் முதலில் பேட்டிங் செய்த அணி நான்கு முறை எதிர் அணியை வீழ்த்தி உள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் முடிவு கிடைக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்யவோ அல்லது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறவோ வாய்ப்பு உள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் இங்கிலாந்து அணி 34 போட்டிகளையும், இந்திய அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 22 போட்டிகள் டிராவில் முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



