இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணிக்கு தற்போது ஒரு மாத காலம் ஓய்வு உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை இங்கிலாந்து தொடரில் பலத்த பாதுகாப்பையும் மீறி இங்கிலாந்து அணியை சேர்ந்த ஏழு வீரர்களுக்கு கொரோனா உறுதியானதன் காரணமாக தற்போது பல புதிய வீரர்களுடன் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் விளையாடி வருகிறது.
இப்படி இங்கிலாந்து வீரர்கள் அங்கு கொரோனா பாதிப்பினை சந்தித்திருக்கும் வேளையில் இந்திய வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ ? என்ற அச்சம் இருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ செய்த சரியான ஏற்பாடு காரணமாக இந்திய வீரர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்ட வீரர்கள் தற்போது இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் போட்டுக்கொண்டனர். இதனால் அவர்களுக்கு சில நாட்கள் வெளியில் செல்ல அனுமதி கொடுத்து விட்டு பின்னர் மீண்டும் பயோ பபுளில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அது தவிர்த்து ஏற்கனவே போதிய பயிற்சி இல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிரான அடைந்த தோல்வி காரணமாக தற்போது இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் கவுண்டி அணிகளுடன் பேசி இந்திய அணியை விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து இந்திய வீரர்களை பாதுகாக்க சரியான கட்டமைப்பை பிசிசிஐ உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



