இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கு காயம் என்கிற ஒரு மிகப்பெரிய பிரச்சனை அவரது கிரிக்கெட் கரியரில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் பாண்டியாவின் இடத்தை எந்த ஒரு வீரராலும் பூர்த்தி செய்ய முடியாது என்கிற நிலை இருந்தாலும் அவர் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக தவறவிடுவது நிர்வாகத்தின் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் பல போட்டிகளை அவர் காயம் காரணமாக தவறவிட்டார்.
2027 உலககோப்பையில் ஹார்டிக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் : முகமது கைப்
அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை காயம் காரணமாக தவறவிட்ட அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதும் அவர் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேளையில் அவரது உடற்பகுதியை நிரூபிக்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களையும் ஹார்டிக் பாண்டியா தவற விட்டுள்ளார்.
இவ்வேளையில் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஹார்டிக் பாண்டியா பங்கேற்பதை உறுதியாக கூற முடியாது என்றும் அவர் அந்த தொடரை தவறவிட அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஹார்டிக் பாண்டியா விடயத்தில் என்னால் எந்த ஒரு உத்தரவாதத்தையும் உறுதியாக அளிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தாலும் அவரது கரியர் முழுவதுமே காயம் அவருக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும்போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டு அணியிலிருந்து வெளியேறுகிறார்.
இப்படி தொடர்ந்து காயங்களை சந்திக்கும் அவர் அடுத்த ஆண்டு 2027 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்று என்னிடம் கேட்டால் அது கடினமான ஒரு விடயம் என்று கூறுவேன். ஏனெனில் ஹார்டிக் பாண்டியாவிற்கு தொடர்ச்சியான காயங்கள் ஏற்படுகின்றன. ஒரு பிரச்சனையிலிருந்து அவர் வெளி வந்தால் மீண்டும் ஒரு பிரச்சனை அவருக்கு காயத்தால் ஏற்படுகிறது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவை தொடர்ந்து நிதீஷ் ரெட்டியும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் இருந்து விலகல் – என்ன காரணம்?
இதனால் அவரது இடத்தை உறுதியாக நம்மால் சொல்ல முடியாது. அதேவேளையில் அடுத்த 2027 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்திய அணியில் இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அவரால் மூன்று விதமான போட்டிகளும் சிறப்பாக செயல்பட முடியும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



