இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த தொடர் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்தது.

ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் இரு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தொடர் வெளிநாட்டில் நடை பெறலாம் அல்லது காலி மைதானத்தில் நடைபெறும் என ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் அவை அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பி.சி.சி.ஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தொடரானது வரும் செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் நிச்சயம் இந்த தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்ததால் இந்த நடைமுறை தற்போது கையாண்டு வருகின்றனர்.

அப்படி செப்டம்பர் 26ம் தேதி துவங்கும் இந்த தொடரானது இரு நகரங்களில் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள டிஎன்பிஎல் தொடர் நடைபெற்ற அனைத்து மைதானங்களிலும் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று கர்நாடகாவில் கேபிஎல் நடைபெற்ற அனைத்து மைதானங்களிலும் போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாக அமைய வாய்ப்பு உள்ளது குறிப்பிட தக்கது.

எது எப்படியோ இந்த திட்டமானது பலித்து செப்டம்பர் 26ம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கினால் நல்லதுதான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இருக்கும் நிலைமையில் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம் தான் என்று தெரிகிறது.



