2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 2008 ஆம் ஆண்டு டி20 லீக் தொடர் நடக்க உள்ளது என்று அறிவித்து, 8 அணிகளை அறிவித்தது பிசிசிஐ. அப்போது ஒவ்வொரு நகரத்திற்கும் வீரர்களை ஏலம் எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சிறந்த அணியை கட்டமைக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

அணியை கட்டமைக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டது. அப்போது தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இருவரில் யாராவது ஒருவர் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் இது குறித்து தினேஷ் கார்த்திக் தற்போது மனவருத்தத்துடன் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பான ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், இந்திய அணியில் இருப்பவருமான, ஒருவருக்குத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பருக்கான இடம் கிடைக்கும் என்று செய்திகள் வெளியானது. இதனால் கண்டிப்பாக அது நானாகத்தான் இருப்பேன் என்று நினைத்தேன்.

மேலும் என்னை நிச்சயமாக சென்னை அணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். கேப்டனாக நியமிப்பது வேறு கதை. ஆனால், திடீரென சென்னை அணி தோனியை கேப்டனாக நியமித்ததாக செய்திகள் வந்தது. அப்போது தோனி என் அருகிலேயே தான் இருந்தார். ஆனால் இது பற்றி எதுவுமே கூறவில்லை. அவருக்கு இது தெரியாமல் இருந்திருக்கலாம்.
அந்த செய்தியை கேட்ட பின்னர் என் இதயமே நின்று போனது. பின்பு சென்னை அணியிலாவது வருங்காலத்தில் எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் தற்போது வரை 13 ஆண்டு காலம் ஆகிவிட்டது. தற்போது வரை சென்னை அணிக்காக ஆட ஏங்கி காத்திருக்கிறேன் என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக கடந்த 20 வருடங்கலாக ஆடி வருகிறார். சிறுவயதிலிருந்தே தமிழக அணிக்காக ஆடி வரும் இவர் கூடிய விரைவில் சென்னை அணிக்காக ஆடுவாரா என்பதை நாம் பார்க்கலாம். தமிழகத்தை சேர்ந்த வீரரான தினேஷ் கார்த்திக் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்தாலும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை அவர் சென்னை அணிக்காக விளையாடியதே இல்லை.

மேலும் அவருக்கு சென்னை அணிக்காக ஒருமுறையாவது ஆடிவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இருப்பினும் இனிவரும் சீசனிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



